விரல் ரேகை பதிவு.. ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்! வெளியூர்களில் வசிப்பவர்கள் என்ன செய்யனும்?

  • சென்னை: அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது. இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாதவர்கள், விடுபட்டவர்கள் விரல் ரேகையை பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகே உள்ள கடைகளில் பதிவு செய்யலாம் எனவும் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் சுமார் 2.28 கோடி குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.

    Advertisement

    ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்

    இதில் உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரேஷன் கார்டில் பெயர் இருப்பவர்கள், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த சூழலில், இன்று தமிழகம் முழுவதும் விரல் ரேகை பதிவுக்காக ரேஷன் கடைளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கை ரேகை பதிவு செய்ய வேண்டும். இதுவரை கை ரேகை பதிவு செய்யாத அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் கை ரேகைகளை பதிவு செய்யலாம்.

    Advertisement

    வேறு பகுதிகளில் வசிப்பவர்கள்

    வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்போர் அருகே உள்ள நியாய விலை கடைகளில் கை ரேகை பதிவு செய்யலாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், இன்று சிறப்பு முகாம்கள் அமைத்து விரல் ரேகை பதிவு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    PHH எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்து இருக்கும் பயனாளிகள், ரேஷன் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு இ-கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

    Advertisement

    20 லட்சம் பேர் பதிவு செய்யவில்லை

    எனினும், இன்னும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விரல் ரேகை பதிவுகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

    ரேஷன் கார்டுகளில் கை விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இகேஒய்சி பதிவு சிறப்பு இன்று நடைபெறும். அனைத்து ரேஷன் அட்டை தாரர்களும், தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை அவசியம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இன்று நடைபெறும் முகாமில் பங்கேற்று பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A special camp is being held today at all ration shops to register fingerprints. The Tamil Nadu government has initiated this measure to ensure that those who have not yet registered—or were previously missed—complete the process. The Cooperative Society has also stated that individuals temporarily residing in other areas may register at nearby shops.