தமிழகத்தில் அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்! எதோ பேட்டர்ன் இருக்கே! தவெக ஆட்சியில் நோ பாதுகாப்பு?

  • சென்னை: ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதும், பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவதும்தான். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரங்கேறி வரும் தொடர்ச்சியான சம்பவங்கள் ஒவ்வொரு பெற்றோரையும் நெஞ்சில் பயத்தோடு வாழ வைத்துள்ளன. சாலையோரம் தூங்கும் பச்சிளம் குழந்தை முதல், வீட்டு வாசலில் விளையாடும் சிறுமி, டியூஷனுக்குச் செல்லும் பள்ளி மாணவன் வரை அடுத்தடுத்து மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

    Advertisement

    சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் உளவுத்துறையின் செயல்பாடு மற்றும் காவல்துறை நிர்வாகம் குறித்து ஏற்கனவே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்போது குழந்தைகள் மீதான பாதுகாப்புப் பலவீனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ள இந்த நான்கு முக்கியச் சம்பவங்கள் மக்களின் அச்சத்தை இரட்டிப்பாக்கியுள்ளன.

    Advertisement

    1. செஞ்சி: பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான 6 வயது சிறுமி - 13 நாட்களாகத் தொடரும் மர்மம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி மாயமாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.

    தன்னுடைய பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் திடீரென மாயமானார். விடிந்து பார்த்த பெற்றோர் குழந்தையைக் காணாமல் கதறி அழுதனர். உள்ளூர் காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து ஏரிகள், காடுகள், கிணறுகள் என ஊர் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சொந்த வீட்டுக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தையைக் கூட பாதுகாக்க முடியாத சூழலா நிலவுகிறது என்ற வேதனை அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    2. ராணிப்பேட்டை: சாலையோரத்தில் தூங்கிய 1 வயது பச்சிளம் குழந்தை கடத்தல்

    ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து நடைபாதையில் பிழைப்பு நடத்தி வரும் எளிய நாடோடித் தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி.

    பெற்றோருடன் சாலையோரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த இந்தக் குழந்தை நள்ளிரவில் மாயமானது. பெற்றோர் விழித்துப் பார்த்தபோது குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் என்பதால் தொடக்கத்தில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தை மாயமாகி பல நாட்களாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டும், குழந்தை எங்கு சென்றது, யாராவது கடத்தினார்களா என்ற விவரம் தெரியாமல் பெற்றோர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்.

    Advertisement

    3. ஊத்தங்கரை: டியூஷனுக்கு லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது மாணவன் மாயம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த பேக்கரி கடை உரிமையாளரின் 12 வயது மகன் சஞ்சய். தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவன், நேற்று மாலை வழக்கம்போல டியூஷனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதறிய குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் சிறுவன் லிப்ட் கேட்டு ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதன்பின் சிறுவன் எங்கு சென்றான், அந்த பைக் நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. பகல் வேளையிலேயே ஒரு பள்ளி மாணவன் இவ்வாறு மாயமானது அந்தப் பகுதி முழுவதும் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    4. காவேரிப்பட்டினம்: குரும்பட்டி கிராமத்து சிறுவன் எங்கே?

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று முதல் திடீரென காணாமல் போயுள்ளார்.

    சிறுவனைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் பதிவாவது, குழந்தை கடத்தல் கும்பலின் கைவரிசையா அல்லது போதைப் பொருள் கும்பல்களின் சதியா என்ற அச்சத்தை மக்களிடையே தீவிரப்படுத்தியுள்ளது.

    குழந்தைகள் கடத்தப்படுகிறார்களா? காவல்துறை கண்காணிப்பில் தொய்வு

    ஒரே மாதத்தில் பல மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் காணாமல் போவது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல; இது பாதுகாப்பு அமைப்பில் உள்ள மிகப்பெரிய இடைவெளியைக் காட்டுகிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மீண்டும் குழந்தை கடத்தல் நெட்வொர்க்குகள் தலைதூக்கியுள்ளனவா என்ற தீவிர விசாரணையை உளவுத்துறை முன்னெடுக்கத் தவறிவிட்டது. கிராமப்புறங்கள் மற்றும் முக்கிய சாலைச் சந்திப்புகளில் முறையான சிசிடிவி கண்காணிப்பு இல்லாததால், குற்றவாளிகள் தப்பிப்பது எளிதாகிவிடுகிறது.

    ஏழை எளிய மக்களின் குழந்தைகள் காணாமல் போகும்போது, ஆரம்பக் கட்டத்திலேயே தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது என்ற குமுறல் பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

    அரசுக்கு எழும் உடனடி பொறுப்பு

    "எங்கள் குழந்தையை வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது" என்ற நிலை சமூகத்தில் உருவாவது ஆட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, சட்டம்-ஒழுங்கில் அரசியல் கணக்குகளைத் தாண்டி மக்களின் அடிப்படை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

    மாயமான அனைத்து குழந்தைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட வேண்டும். அத்துடன் பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பை உடனடியாகப் பலப்படுத்தாவிட்டால், பொதுமக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை முழுமையாகச் சரிந்துவிடும்.

    English Summary

    Spike in Missing Children Across Tamil Nadu: Public Concern Mounts Over Child Safety and Law & Order