சென்னை: செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட பணி ஆணை தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 112 ஏக்கரில் ரூ.206 கோடி மதிப்பில் விளையாட்டு நகரம் அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு தவெக அரசு சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த விளையாட்டு நகரத்தில் கால்பந்து மைதானம், வில்வித்தை மைதானம், துப்பாக்கிச் சுடுதல் மையம், ரோலர் ஸ்கேட்டிங் தடகளம், நீச்சல் மற்றும் பிஎம்எக்ஸ் போன்ற சர்வதேச விளையாட்டு வசதிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வீரர்களுக்கான தங்குமிட வசதி, உள்விளையாட்டு அரங்கம், படகு சவாரி வசதி ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிர்ந்தது. 2023ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு இறுதி செயல்பாட்டில் முன்னேற்றம் அடைந்தது. அதுமட்டும் விளையாட்டு நகரத்திற்கு மெட்ரோ வசதி மற்றும் சாலைகள் உருவாக்கும் பணிகளும் வேகம் எடுத்தன. இந்த விளையாட்டு நகரம் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழக அரசு கைப்பற்றிய நிலத்தில் கொண்டு வரப்படுவதாக இருந்தது. ஈசிஆர் சாலையில் அமைக்கப்பட இருந்ததால், மாணவர்கள் எளிதாக பயணிக்கவும் சரியான தேர்வாக அமைந்தது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டு, பின் டெண்டர் கோரப்பட்டு அந்த டெண்டர் ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்த தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்த பணி ஆணை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 112 ஏக்கரில் ரூ.206 கோடி மதிப்பில் விளையாட்டு நகரம் அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதனை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு தவெக அரசு சார்பாக கடிதம் அனுப்பி இருக்கிறது. இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக ஆர்பிபி நிறுவனம் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த திட்டம் வேறு பெயரில் தவெக ஆட்சியில் மீண்டும் கொண்டு வரப்படுமா அல்லது செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை மொத்தமாக கைவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.