தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி கைது.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கினர்!

  • சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். ஆவணங்களை கேட்டபோது இருவரும் வாக்காளர் அடையாள அட்டையை காட்டியுள்ளனர்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் வயதான இலங்கை தம்பதிகளிடம் விசாரித்தபோது அவர்கள் 2026 சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் இலங்கை தம்பதியரை கைது செய்த குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களை மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பேரம்பலம் குனேஸ்வரன், அவரது மனைவி நகுலாம்பிகை ஆகியோர் யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.

    அப்போது, குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர்களிடம் இந்திய ஆதார் அட்டை, இந்திய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்துள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் தியாகராய நகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மேலும், நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் வாக்களித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் பேரம்பலம் குனேஸ்வரன், அவரது மனைவி நகுலாம்பிகை ஆகிய இருவரையும் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    மாம்பலம் போலீசார் பேரம்பலம் குனேஸ்வரன், அவரது மனைவி நகுலாம்பிகை ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டினர், குறிப்பாக இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், முறைகேடாக வாக்களித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய குடியுரிமை இல்லாத நிலையில், சிலர் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A case has been registered against a Sri Lankan couple who voted in the Tamil Nadu Assembly elections. The couple was intercepted at Chennai Airport; when asked for documents, they produced their voter identity cards.