கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி?

  • சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண்ணான 18 வயது யாசினி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனியார் மதுபான பாருக்கு சீல் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    சென்னை கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நடனம் ஆடும்போது இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரையும் பவுன்சர்கள் வெளியே அனுப்பி உள்ளனர். வெளியே சென்ற பிறகும் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    கார் ஏற்றி கொலை

    இந்த நிலையில் காரில் வந்த ஒரு தரப்பினர், 3 இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் உள்ளிட்டோரை விரட்டி சென்றுள்ளனர். இதில் இளம்பெண் ஒருவர் மீது காரை ஏற்றி உள்ளனர். சம்பவ இடத்திலேயே இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்தவர் யாசினி (வயது 18). அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். திருவள்ளூரை சேர்ந்த இவரது தோழியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த யாசினி பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் சென்று சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    7 பேர் கைது

    இந்த நிலையில் நேற்று இரவு யாசினி தனது தோழிகள் சிலருடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. மது குடித்துவிட்டு தனது தோழிகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த போது, சுமன் சக்திவேல், பாலகுரு உள்ளிட்ட 7 பேர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு முற்றியதில் பார் பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து வெளியே வந்த பாலகுரு மற்றும் சுமன் சக்திவேல் தரப்பினர் காரில் புறப்பட்டுள்ளனர். அதே சமயம் யாசினி மற்றும் அவர்களது தோழிகள் 3 இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். அப்போது காரில் வந்த பாலகுரு தரப்பினர் யாசினியை இரு சக்கர வாகனத்தின் மீது மோதி காரால் ஏற்றி கொலை செய்துள்ளனர். யாசினியுடன் இருந்த சிறுமியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தனியார் மதுபான பாருக்கு சீல்

    இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்ற பாலகுரு, கிஷோர், சுமன் சக்திவேல், விமல், மோகன சுந்தரம், ராகுல், ஜோஷ்வா ஆகிய 7 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களது காரில் திமுகவின் கொடி கட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மகள் இறந்த செய்தி அறிந்த கோயம்பேடு போலீஸ் நிலையம் வந்த அவரது தாய் கதறி அழுதார்.

    மேலும் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதார். இதேபோன்று சிறுமி உள்ளிட்டோரை எப்படி மதுபான பாரில் அனுமதித்தீர்கள் என்று தனியார் மதுபான உரிமையாளரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து தனியார் மதுபான பாருக்கு போலீசார் சீல் வைத்து உத்தரவிட்டனர்.

    English Summary

    Sri Lankan Tamil woman: An 18-year-old Sri Lankan Tamil woman, Yashini, was allegedly run over and killed following a dispute at a private bar near Chennai's Koyambedu. Police arrested seven suspects in connection with the incident. A minor girl was injured, and authorities have sealed the bar as investigations continue.