தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. வருத்தமளிக்கிறதாம்! ஸ்ரீதர் வேம்பு சொன்னதை பாருங்க!

  • சென்னை: நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, மாணவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வந்தனர். இதையடுத்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். ஆனால், இது வருத்தமளிப்பதாக ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஒருமுறை, இரண்டு முறை இல்லை.. மொத்தமாக 152 முறை நீட் வினாத்தாள்கள் லீக் ஆகியிருக்கின்றன. இந்த பிரச்சனை நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    எனவே தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம் தமிழ்நாடு, கேரளம், பீகார், மகாராஷ்டிரா என மற்ற மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியது. ஒரு மாதத்திற்கும் மேல் இந்த போராட்டம் நீடித்து வந்த நிலையில், கடைசியாக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். மறுபுறம் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தர்மேந்திர பிரதான் எனக்கு தெரிந்த மிகச்சிறந்த பொது சேவை ஊழியர்களில் ஒருவர். இந்த நாட்டின் இளைஞர்கள், கிராமப்புற மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து நாங்கள் பலமுறை விவாதித்திருக்கிறோம்.

    Advertisement

    இப்படி இருக்கையில் அவர் ராஜினாமா செய்திருப்பது வருத்தமளித்திருக்கிறது. தன்னைவிட.. நாட்டின் நலனே முக்கியம் என்று கருதி.. நாட்டின் நலனை முன்னிறுத்தி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதனால் அவர் மீதான மரியாதை எனக்கு இன்னும் அதிகரித்திருக்கிறது. தர்மேந்திர பிரதான் அவர்களே உங்கள் சேவைக்கு நன்றி. உங்கள் நற்பணிகளை தொடருங்கள்" என்று கூறியிருக்கிறார்.

    நீட் எதிர்ப்பு விஷயத்தில் பல்வேறு தரப்பினரும் ஓரணியில் நின்றனர். பாஜகவுக்கு ஆதரவளித்த கட்சிகள் கூட.. இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசியிருந்தன. இப்படி இருக்கையில் ஸ்ரீதர் வேம்பு தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாக பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Sridhar Vembu: Students had been protesting for over a month, demanding that Dharmendra Pradhan resign as Union Education Minister and take responsibility for the irregularities surrounding the NEET and CBSE exams. Subsequently, Dharmendra Pradhan resigned. However, Sridhar Vembu, CEO of Zoho, has expressed regret over this development.