ஸ்ரீபெரும்புதூர் புதிய மேம்பாலத்தில் திடீர் ஓட்டைகள்! சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் என்ன நடந்தது

  • சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தில் சில நாட்களிலேயே விரிசல்களும், பள்ளங்களும், ஓட்டைகளும் ஏற்பட்டுள்ளதை பார்த்து வாகன ஓட்டிகள் ஆடிப் போய்விட்டார்கள்.. கனரக வாகனப் போக்குவரத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பேயே தடுப்புகளை அமைத்துள்ள காவல்துறையினர், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?

    Advertisement

    சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தமிழகத்தின் முக்கியமான தொழில் மற்றும் வணிக வழித்தடங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான இலகு ரக, கனரக சரக்கு வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி சென்னை மற்றும் பெங்களூரு இடையே பயணித்து வருகின்றன.

    Advertisement

    சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

    இதன் காரணமாக இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை சேமிக்கவும், 4 வழிச்சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையை கடக்கும்போது விபத்துகள் ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அவைகளுக்கு தீர்வாக உயர்மட்ட மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்திலும் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.. இந்தப் பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

    Advertisement

    ஸ்ரீபெரும்புதூர் புதிய மேம்பாலம்

    பாலத்தின் பணிகள் மொத்தமாக முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இப்போதுதான் வந்துள்ளது.. ஆனால் அதற்குள் இந்த சாலையையும் பாலத்தையும் இணைக்கும் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இது தவிர, அதே பாலத்தின் மீது மேலும் 2 இடங்களில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. இதை பார்த்தது பொதுமக்கள் அதிர்ச்சியிடைந்துவிட்டனர்.. காரணம், இந்த மேம்பாலம் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருவதால், பாலத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்து சேதமடையக்கூடும்.. மேலும், வேகமாக வரும் வாகனங்கள் இந்த சாலையில் உள்ள பள்ளத்தைக் கவனிக்க முடியாமல் அதில் சிக்கி விபத்தில் சிக்கும் சூழலும் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    ஓட்டைகள் - பொதுமக்கள் கோரிக்கை

    இப்போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், காவல் துறையினர் அப்பகுதியில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.. மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள இந்த சேதத்தை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதனால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி அரவிந்த்திடம் கேட்டபோது, "மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளம் கட்டுமானக் குறைபாட்டினால் ஏற்பட்டது கிடையாது, புதிய மேம்பாலம் என்பதால், ஆரம்பக் கட்டத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது இதுபோன்ற சின்ன சின்ன விரிசல்கள் ஏற்படுவது இயல்பானதுதான். இந்தப் பள்ளத்தைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

    English Summary

    Sriperumbudur New Flyover: Sudden Gaps on Chennai Bengaluru Highway, What Happened?