மாட்டிக்கிட்டா ஒத்துக்கனும்.. சமாளிக்க கூடாது! ஷூவால் ரமேஷுக்கு வந்த சிக்கல்.. ரவிக்குமார் கண்டனம்!

  • சென்னை: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுர திருப்பணிப் பணிகளை பார்வையிட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஷூ அணிந்து சென்ற சம்பவம் இந்து மக்களின் மனதை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," இந்த விவகாரத்தில், "அந்த இடம் முழுவதும் இடித்து அகற்றப்பட இருந்தது", "கல்லும், முள்ளும், ஆணியும், இரும்பும் இருந்தது", "உபயதாரரின் ஆலோசனையின்படி ஷூ அணிந்தேன்" என்று கூறி தனது செயலை நியாயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

    Advertisement

    முதலில் அமைச்சர் விளக்க வேண்டிய கேள்வி இதுதான்: முழுவதும் இடித்து அகற்றப்பட வேண்டிய இடம் என்றால், எதை அகற்றப் போகிறீர்கள்?அது திருக்கோயிலின் ஒரு பகுதிதானே? அப்படியிருக்க, அந்த இடம் திருக்கோயிலின் புனித எல்லைக்குள் வராததா? அல்லது அந்த இடத்தில் ஆகம மரபுகள் பொருந்தாதா?

    அமைச்சரின் இத்தகைய விளக்கங்கள் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. மேலும், கல்லும், முள்ளும், ஆணியும், இரும்பும் இருந்த அளவுக்கு ஆபத்தான இடமாக இருந்தால், அமைச்சர் அங்கு நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் என்ன? அதிகாரிகள், பொறியாளர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டிய பணியை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட வேண்டிய அவசியம் என்ன? அதற்குப் பிறகு "அதனால் ஷூ அணிந்தேன்" என்று கூறுவது தவறை மறைக்க முனையும் விளக்கமாகவே தெரிகிறது.

    Advertisement

    உபயதாரர் கூறியதால் ஷூ அணிந்து சென்றேன் என்ற காரணமும் ஏற்கத்தக்கதல்ல. ஒரு அமைச்சரின் முடிவு, யாரோ ஒருவரின் ஆலோசனையால் மட்டுமே நிர்ணயிக்கப்படக் கூடாது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர், கோயில் மரபுகள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை முன்னிலைப்படுத்தியே செயல்பட வேண்டும். திருக்கோயில் திருப்பணி என்பது சாதாரண கட்டுமானப் பணி அல்ல. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்கு தனி ஒழுங்கு இருப்பதுபோல், நீதிமன்ற அரங்கிற்கு தனி நடைமுறை இருப்பதுபோல், ஆய்வகங்களுக்கு தனி பாதுகாப்பு விதிகள் இருப்பதுபோல், திருக்கோயில்களுக்கும் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் புனித மரபுகள் உள்ளன.

    Advertisement

    அவற்றை ஒரு சாதாரண கட்டுமானத் தளத்துடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்ற ஒப்பீடாகும். ஒரு பள்ளிவாசலுக்குள் அல்லது தேவாலயத்தின் பலிபீடப் பகுதிக்குள் செல்லும்போது அங்குள்ள மரபுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது போலவே, இந்து திருக்கோயில்களின் புனித மரபுகளும் மதிக்கப்பட வேண்டும். இது எந்த மதத்தையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல; ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டு மரபுகளுக்கும் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையாகும்.

    ஒரு சாதாரண பக்தர் இதே செயலைச் செய்திருந்தால், கோயில் நிர்வாகம் அனுமதித்திருக்குமா? அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்காதா? அப்படியிருக்க, அமைச்சருக்கு மட்டும் வேறு அளவுகோல் ஏன்?
    தவறு நிகழ்ந்திருக்கலாம். ஆனால் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது தலைமைத்துவத்தின் அடையாளம். மாறாக, பகுத்தறிவு என்ற பெயரில் தொடர்ந்து நியாயப்படுத்துவது தேவையற்ற சர்ச்சையை உருவாக்குகிறது.

    Advertisement

    மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர், இந்து சமய உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உடையவர். அப்படியிருக்க, தொடர்ந்து இந்து சமய மரபுகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவது, பக்தர்களின் நம்பிக்கையை பாதிக்கிறது. இதுபோன்ற அணுகுமுறையால் அமைச்சர் பதவியின் மாண்பும் கேள்விக்குறியாகிறது. எனவே,ஸ்ரீரங்கம் சம்பவத்தில் தனது செயலுக்கு அமைச்சர் வெளிப்படையாக இந்து மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

    திருக்கோயில் திருப்பணிகளில் பங்கேற்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் குறித்து தெளிவான நடைமுறைகளை அரசு வெளியிட வேண்டும். திருக்கோயில்களின் புனிதத் தன்மையை மதிக்கும் வகையில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தவறை ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல; அது பண்பும் பொறுப்பும் கொண்ட தலைமைத்துவத்தின் அடையாளம். ஆனால் தவறை நியாயப்படுத்துவது, அந்தத் தவறை விட பெரிய தவறாகவே மக்கள் கருதுவார்கள்." என கூறியுள்ளார்.

    English Summary

    Hindu Tamilar Katchi leader Rama Ravikumar criticises the HR&CE Minister over the Srirangam temple shoe controversy and seeks an apology.