துபாய் பறக்கும் தலைகள்.. திரும்பியதும் 'துரோகிகள்' மீது ஸ்டாலின் - உதயநிதி எடுக்கப்போகும் ஆக்சன்

  • சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் மிகப்பெரிய உள்கட்சி புயலை கிளப்பியுள்ளது. தேர்தல் தோல்வி மற்றும் பின்னடைவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு, தங்களது விரிவான கள ஆய்வு அறிக்கையை கட்சியின் தலைமைக்கு சமர்ப்பித்துள்ளது.

    Advertisement

    இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சித் தகவல்களைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்கட்சியில் பெரும் 'களையெடுப்பு' நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இருப்பினும், இந்த அதிரடி நடவடிக்கைகள் யாவும் அவர்கள் இருவரும் தங்களது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய உடனேயே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வெளிநாடு பறக்கும் ஸ்டாலின் - உதயநிதி:

    தேர்தல் களப்பணிகள் மற்றும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் தீவிரமாக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தனது குடும்பத்தினருடன் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஓய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் விரைவில் தமிழகம் திரும்பவுள்ளார்.

    மறுபுறம், மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டமாக அரசு மற்றும் தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஜூன் இறுதி மற்றும் ஜூலை மாத வாக்கில் இந்த பயணங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தலைவர்கள் இருவரும் சென்னை திரும்பியதும் அறிவாலயத்தின் ஆக்ஷன் பிளான் முழு வீச்சில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    தலைமைக்கு வந்த 'துரோக' பட்டியல்:

    உண்மை கண்டறியும் குழு சமர்ப்பித்த அறிக்கையில், பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் கட்சிக்கு உண்மையாக உழைக்காமல் 'முதுகில் குத்திய' விவகாரங்கள் ஆதாரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பல விஐபி தொகுதிகளில் உள்ளூர் நிர்வாகிகள் எதிர்க்கட்சியினருடன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு, திமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேலை செய்தது அம்பலமாகியுள்ளது.

    தலைமை அனுப்பிய தேர்தல் நிதியை முறையாகக் கீழ்மட்டப் பணிகளுக்குக் கொண்டு சேர்க்காமல் ஏமாற்றியது, சொந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் செயல்பட்டது என அடுக்கடுக்கான புகார்கள் தலைமைக்குச் சென்றுள்ளன.

    Advertisement

    காத்திருக்கும் டிஸ்மிஸ் நடவடிக்கை:

    தலைவர்கள் இருவரும் தமிழகம் திரும்பியதும், முதற்கட்டமாக தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் அறிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவுள்ளது. துரோகம் செய்தவர்கள் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறிக்க ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.

    "கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும்" என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தனது நெருக்கமான நிர்வாகிகளிடம் கறாராகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, மாவட்ட வாரியாக புதிய முகங்களுக்குப் பொறுப்புகளை வழங்கி, திமுகவை மீண்டும் புனரமைப்பதே இந்த பயணத்திற்குப் பிந்தைய அதிரடி ஆக்ஷனின் முக்கிய நோக்கமாக இருக்கும் என அறிவாலய வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

    English Summary

    Stalin and Udhayanidhi Plan Massive Post-Return Action Against ‘Backstappers’ After Foreign Trips