சென்னை: தமிழர்கள் 3 பேரை கர்நாடகா வனத்துறை சுட்டுக்கொலை செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசுப் பணி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ஸ்டாலின், மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் காணாமல் போன மாடுகளை தேடி சென்ற 3 தமிழர்களை, மான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டி கர்நாடகா வனத்துறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக் கொலை செய்யப்பட்ட அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள்.
இவர்களுடன் சென்றிருந்த மகிமை தாஸ் மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொள்ளேகால், ஹனூர், தோமையார் பாளையாளம், ஜகன்னாததொட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது. மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.