கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!

  • சென்னை: ஒருவார பயணமாக கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்குச் சென்று ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரும் சென்றிருந்தனர். இவர்கள் சென்ற மறுநாள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் கூர்க் சென்று அவர்களுடன் இணைந்து கொண்டார். மகன் மற்றும் மருமகனுடன் ஸ்டாலின் கூர்க் பயணம் எதற்காக? என்று மத்திய - மாநில உளவுத்துறைகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டன. மாநில உளவுத்துறையால் அந்த ரகசியத்தை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், மத்திய உளவுத்துறையினருக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன.

    Advertisement

    இது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, நமக்கும் சில தகவல்கள் கிடைத்தன. அதாவது, கூர்க் பகுதியில் திமுகவின் அறக்கட்டளைக்குச் சொந்தமான சில சொத்துக்கள் உண்டு. அந்த சொத்துக்களில் அடங்கிய ஒரு ஹெஸ்ட் ஹவுசில் தான் ஸ்டாலின் தங்கினார்.

    Advertisement

    மகன், மருமகன், பொருளாளரிடம் கலந்தாலோசனை நடத்திய ஸ்டாலின், தேர்தலுக்காக ஒவ்வொரு அமைச்சரிடமும் குறிப்பிட்டத் தொகையை கொடுத்திருந்தோம். அப்படியிருந்தும் எப்படி இந்த தோல்வி? என்று தான் முதலில் ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின். அதற்கு சபரீசன், ''ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நம்மை ஏமாற்றியது ஒரு புறம் என்றால், அமைச்சர்களும் மா.செ.க்களும் நம்மை ஏமாற்றியது மற்றொரு புறம். அதிகாரிகளை விட்டுத்தள்ளுங்கள். ஆனால், அமைச்சர்களும் மா.செ.க்களும் ஏமாற்றியதுதான் ஜீரணிக்க முடியவில்லை'' என்று ஆதங்கப்பட்டுப் பேசியுள்ளார்.

    அப்போது பேசிய உதயநிதி, ''எனக்கும் இப்படிப்பட்ட தகவல்கள்தான் கிடைத்துள்ளது அப்பா. அமைச்சர்கள் பலரும் அவரவர் தொகுதியில் அவர் ஜெயிக்க வேண்டும் என்பதில் தான் அக்கறைக்காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சியினரை ஜெயிக்க வைக்க முயற்சிக்கவில்லை. அவர் ஜெயித்தால் நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ? இவர் ஜெயித்தால் போட்டியாக வந்து விடுவாரா? என்று திட்டமிட்டு, அரசியல் செய்துள்ளனர். எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என பகிர்ந்தளித்து ப்ளான் போட்டுக் கொடுத்தோமோ அதன்படி செலவு செய்யவில்லை. எல்லாத்தையும் அமுக்கிக் கொண்டார்கள்'' என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    அப்போது,பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம், யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது ? என்று கேட்க, அவர் விபரமாகச் சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஸ்டாலின். காரணம், ஒவ்வொரு தொகையும் மிக கனமான தொகை. இதனையடுத்து, கொடுக்கப்பட்ட தொகையை சுருட்டிக்கொண்டவர்கள் என யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருந்ததோ, அவர்களை தொடர்பு கொண்டு வறுத்து எடுத்துள்ளார் ஸ்டாலின்.

    சென்னையில் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி, தா.மோ.அன்பரசன், ஏ.வ.வேலு, மூர்த்தி, கே.என்.நேரு, கோவி செழியன், அனிதா ராதாகிருஷ்ணன், திட்டக்குடி கணேசன் என 22 அமைச்சர்களுக்கு செம டோஸ் கொடுத்துள்ளார் ஸ்டாலின். அதேபோல மா.செ.க்களும் டோஸ் விழுந்துள்ளது.
    சேகர்பாபுவிடம், கொளத்தூர் தொகுதியில் நான் தோற்பேன் என உனக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றி உனக்கு கொஞ்சமும் கவலை இல்லை. உன் தொகுதியை மட்டும் பார்த்துக்கொண்டாய்.

    Advertisement

    வடசென்னையில் உன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு சதி செய்திருக்கிறாய். இத்தனைக்கும் நீ என்ன கோட் பண்ணினாயோ அதை முழுமையாகத்தானே கொடுத்திருக்கிறோம். அப்படியிருந்தும் துரோகம் செய்திருக்கிறாய்'' என்று ஏகத்துக்கும் கொந்தளித்துள்ளார் ஸ்டாலின்.

    அதேபோல, அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கும் இதே ரீதியில் டோஸ் கொடுத்த ஸ்டாலின், ''உனது கண்ட்ரோலில் 65 தொகுதிகள் இருந்தது. அதில் 6 தொகுதிகளில் தான் கட்சியை ஜெயிக்க வைத்திருக்கிறாய். இது சரிதானா? இந்த லட்சணத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி கேட்டு என்னிடம் நச்சரிக்கிறாய்'' என்று கடிந்து கொண்டுள்ளார்.

    இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசயத்தைச் சுட்டிக்காட்டி கோபத்துடன் பேசியுள்ளார் ஸ்டாலின். மேலும், கொடுக்கப்பட்ட தொகைக்கு உண்மையான கணக்குகளை காட்டுங்கள். அதில் பொய்யான தகவல்கள் இருந்தால் நான் நானாக இருக்க மாட்டேன் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

    Advertisement

    கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட தொகைக்கும், அவர்கள் காட்டப்போகும் தொகைக்கும் வித்தியாசம் இருந்தால், மீதி தொகையை கட்சி கணக்கில் கட்டச் சொல்ல திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
    தேர்தல் தொடர்பான கணக்கு வழக்குகளை ஆராய்ந்தப் பிறகு , கட்சி ரீதியாக செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் கூர்க் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளன என்று உளவு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Stalin Grills Sekar Babu and DMK Ministers Over Coorg Election Review Shocking Details