சென்னை: ஆதவ் அர்ஜுனாவின் கை சுத்தமில்லை என முன்னாள் அமைச்சர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஆதவ் வழக்கை அபராதத்துடன் ரத்து செய்யுமாறும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோவுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என கூறி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி 258 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என உண்மை அம்பலமாகியுள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அமலாக்கத் துறை குறிப்பிட்டிருந்த ஜான் பிரிட்டோ, தனது உறவினர் அல்ல எனக் கூறி ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஐடி விங் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் இன்றைய தினம் ஸ்டாலின் பதில் மனுவில் ஆதவ் அர்ஜூனாவின் மாமனார், மாமியார், மாமியாரின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. ஆதவ் அர்ஜூனாவும் சிபிஐ வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை எதிர்கொண்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார். ஆனால் அதை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் கை சுத்தமாக இல்லை. சுத்தமான கரங்களுடன் அவர் நீதிமன்றத்தை அணுகவில்லை. அதனால் எந்த நிவாரணமும் கோர உரிமையில்லை. போதை பொருள் கடத்தல் தொடர்பாகவோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோவை தொடர்புபடுத்தியோ பதிவுகள் வெளியிடும்படி ஐடி விங்குக்கு ஒப்புதலோ, அறிவுறுத்தலோ வழங்கவில்லை, கட்சியின் பல்வேறு பிரிவுகள் சமூகவலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு தலைவர் என்பதற்காக என்னை பொறுப்பாக்க முடியாது. கட்சியின் தலைவர் என்ற முறையில் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மீது நிர்வாக ரீதியில் கட்டுப்பாடு உள்ளதே தவிர அந்த அணியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு என்னை சட்டப்படியாக பொறுப்பாக்க முடியாது. ஜான் பிரிட்டோ என்ற பெயரில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு உறவினர் இருக்கிறார் என்பதையோ அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு உள்ளது என்பதையோ ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் மறுக்கவில்லை. எனவே உள்நோக்கத்துடன் பதிவுகளை வெளியிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்து வரும் நிலையில் அவரை அவமதித்ததாக கூறுவத வினோதமானது. ஏற்கெனவே தன்னை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, தற்போது மான நஷ்ட ஈடு கோர முடியாது. அவரது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அதை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய திமுக ஐடி விங் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.