திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? ஸ்டாலின் கொடுத்த நச் பதில்!

  • சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். விரைவில் ஸ்டாலின் சட்டசபை செல்வார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசி இருந்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரவிருக்கிறது. குறிப்பாக முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 6 தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம், விராலிமலை ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பணிகளில் திமுகவினர் இறங்கிவிட்டனர். அதேபோல் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கே மீண்டும் சீட் கிடைக்கும் என்பதால், அவர்களும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த 6 தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த 6 தொகுதிகளில் தவெக தோல்வி அடைந்தால், அது ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக்கக் கூடும். அதேபோல் திமுக பாதி தொகுதிகளில் வென்றாலும், சட்டசபையில் அதன் பலம் அதிகரிக்கும்.

    Advertisement

    அதிமுகவில் எடப்பாடியின் தலைமை நிரூபிக்கப்படும். இப்படியான சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "ஸ்டாலின் அவர்கள் விரைவில் சட்டசபைக்குச் செல்வார்" என்று பேசி இருந்தார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் இடைத்தேர்தலில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், "திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறாரே, நீங்கள் போட்டியிடுவது உறுதியா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக ஸ்டாலின் களமிறங்கினால், அது மிகப்பெரிய விஷயமாக மாறும். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒட்டுமொத்த திமுகவும் களமிறங்கி பணியாற்றும். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.

    English Summary

    Stalin: No Decision Made Yet says DMK Chief MK Stalin on Contesting Trichy East By-Poll Following KN Nehru's Statement