ஜேசிடி பிரபாகரை பாராட்டிய ஸ்டாலின்! சட்டசபையின் ஆட்ட நாயகன்! சித்தரஞ்சன் சாலையில் வைரமுத்து

  • சென்னை: சட்டசபையை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சிறப்பாக வழிநடத்துகிறார் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர்
    மு.க.ஸ்டாலினை
    நட்பின் நிமித்தமாய்
    நலம் கேட்கச் சென்றேன்;
    பொன்னாடை அணிவித்தேன்

    Advertisement

    ஞானபீடத்தின் பெருமையறிந்து
    வீட்டுக்கே வந்து வாழ்த்திய
    அந்நாள் முதலமைச்சர்,
    பெற்றுவந்த விருதுக்காக
    மீண்டுமொரு
    பொன்னாடை அணிவித்தார்

    பொன்னாடைக்குப்
    பொன்னாடை

    "எதைக் கொடுக்கிறாயோ
    அதையே பெறுவாய்"
    என்ற முதுமொழி
    என் மூளைக்குள் ஓடியது

    ஒருவரை ஒருவர்
    கொண்டாடிக் கொண்டோம்

    சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை
    முக்கால் மணிநேரம்
    இருவரும் கண்டுகொண்டிருந்தோம்

    "ஜே.சி.டி பிரபாகர்
    சிறப்பாக நடத்துகிறார்
    சட்டமன்றத்தை" என்றார்
    தி.மு.க தலைவர்

    "சட்டமன்றத்தின்
    ஆட்ட நாயகன்" என்று
    சமூக ஊடகங்கள்
    சபாநாயகரைப் பேசுகின்றன
    என்றேன்

    "அப்படியா" என்றார்

    ஓர் அழகான காஃபி
    குடித்து முடித்து
    வாழ்த்தி விடைகொண்டேன்

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். உண்மையில் திமுகவினர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை கொண்டாடி வருகிறார்கள். சட்டசபை சபாநாயகரான ஜேசிடி பிரபாகர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி.

    எம்ஜிஆருடன் பயணித்த போது "எனக்கு ஒரு பெண் பிள்ளை இருந்திருந்தால் அவரை பிரபாகருக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பேன்" என சொன்னாராம் எம்ஜிஆர். அது போல் தமாகா தலைவர் மூப்பனாருடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்.

    Advertisement

    இதுநாள் வரை ஊழல் வழக்குகளில் சிக்காதவர். கிளீன் இமேஜ் கொண்டிருக்கிறார். இதனால் இவரை சபாநாயகராக தேர்வு செய்தது ஆளும் கட்சியின் நல்ல ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.

    சட்டசபையில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் துணை முதல்வர், பல முறை எம்எல்ஏவானவர்கள் என இருந்தாலும் ஆளும் கட்சியில் பல புதியவர்கள் உள்ளனர். அமைச்சரவையில் கூட செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் எல்லாம் புதியவர்கள்தான்.

    புதியவர்கள் எனும் போது சட்டசபை மரபு தெரியாமல் அவர்கள் பேசும் போது அதை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் ஜேசிடி இருக்கிறார். அதாவது புதியவர்களும் அனுபவசாலிகளும் நிரம்பியுள்ள சபையை மிக அற்புதமாக கையாண்டு வருகிறார் ஜேசிடி.

    Advertisement

    எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கும் போது நிதானமாக பேசி அவர்களை சமாதானப்படுத்தும் அதே சபாநாயகர், ஆளும் கட்சியினர்தானே பேசட்டும் என வேடிக்கை பார்ப்பதில்லை. அவர்களுக்கு கடிவாளம் போட்டு, அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் கண்டிக்கிறார்.

    எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சியினர் தேவையில்லாமல் தாக்கி பேசினால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார். இதுவரை ஆளும்கட்சியில் முதல்வர் விஜய், செங்கோட்டையனை தவிர ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ் உள்ளிட்டோர் பேச்சுக்கு பல முறை சபாநாயகர் தடை விதித்து கண்டித்துள்ளார்.

    அது போல் விஜய்யை ஆளும் கட்சியினர் புகழ்ந்து பாடினாலும், அப்போது குறுக்கிடும் சபாநாயகர், அவர்களை தடுத்து நிறுத்தி சப்ஜெக்ட்டுக்கு வாங்க என கூறிவிடுகிறார்.

    Advertisement

    இதுபோல் கடந்த காலங்களில் எல்லாம் சபாநாயகர்கள் இல்லை என்கிறார்கள். எனவே சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடு அருமை என்கிறார்கள். அதிலும் ஆளும் கட்சியினர் பேச்சுக்கு சபாநாயகர் கொடுக்கும் முக பாவனைகள் அருமையாக இருக்கும்.

    அரசியலில் மூத்த தலைவர்களுடன் நட்புறவில் இருந்த சபாநாயகர், அதிமுகவில் இருந்து வந்தாலும் இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார். தட்டி கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டி கொடுக்கிறார், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கறார் காட்டுகிறார். மொத்தத்தில் ஸ்டாலினே பாராட்டும் அளவுக்கு சபாநாயகரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்!

    English Summary

    Ex CM Stalin praises Tamil nadu Speaker JCD Prabhakar for his performance. It was told by Vairamuthu.