பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்!

  • சென்னை: கேரளா மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் இன்று பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், அதற்குத் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    Advertisement

    கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட் என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது, பண மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    பின்னணி என்ன?

    'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்' (CMRL) என்ற கனிம நிறுவனத்திற்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் பெருமளவில் லஞ்சமும், பண மோசடியும் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில், பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வரும் 'எக்ஸாலாஜிக்' (Exalogic) என்ற ஐடி நிறுவனத்திற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

    நீதிமன்றத்தின் பச்சைக்கொடி

    இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை ரத்து செய்யக் கோரி CMRL நிறுவனம் தொடர்ந்த வழக்கை, கேரள உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை தனது அடுத்தகட்ட பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    விடிய விடிய அதிரடி வேட்டை

    நீதிமன்ற உத்தரவு வந்த அடுத்த நாளே, அதாவது இன்று (மே 27) காலை முதலே அமலாக்கத் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லம், அவரது மருமகனும், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான பி.ஏ.முகமது ரியாஸின் இல்லம், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல்வேறு தொடர்புடைய இடங்கள் எனப் பல இடங்களில் இந்தச் சோதனை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஸ்டாலின் போட்ட பதிவு

    இந்த சோதனைக் குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசையும், கேரள காங்கிரஸ் தலைவர்களையும் ஒரே நேரத்தில் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பதிவில், "கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத் துறை ரெய்டுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடும் இத்தகைய போக்கு மிகவும் தவறானது." எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸுக்கு பதிலடி

    மேலும், கேரளா காங்கிரஸ் கட்சியினருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "பினராயி விஜயன் ஏன் இதுவரை பாஜகவால் குறிவைக்கப்படவில்லை எனப் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பதையும் இந்த ரெய்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன" என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    கேரளாவில் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே அரசியல் மோதல் நிலவி வரும் சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    English Summary

    As the Enforcement Directorate conducts a surprise raid on the residence of former Kerala Chief Minister Pinarayi Vijayan, former Tamil Nadu CM and DMK President MK Stalin has registered his strong condemnation of the action.