சென்னை: "முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளது. தவெக அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், திமுகவின் முன்னணி முகங்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் கே.என்.நேரு.
இந்த நிலையில் தான், சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் தற்போது லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வீடுகளில் நடந்து வரும் அதிரடி சோதனை தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக சோதனை என்பது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தார் கே.என்.நேரு. அப்போது நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 800 கோடிக்கு மேல் பெற்றுக் கொண்டு மோசடி நடைபெற்றதாக ஏற்கனவே வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில், அந்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் இந்தச் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என தவெக அரசை திமுக தரப்பு விமர்சித்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே திமுக முதன்மைச் செயலாளர் சகோதரர் கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கேஎன் நேருவும், தி.மு.கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!" எனத் தெரிவித்துள்ளார்.