மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

  • சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்முறைகள் நடந்த செய்தியை சுட்டிக்காட்டிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு கால்ஷீட் எப்போது என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"

    "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"

    என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

    மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?

    கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

    சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

    மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

    இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?

    #WhySilentCM? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. மணிமங்கலத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகார் மாநிலத்தவர் கைது செய்யப்பட்டார்.

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, முட்புதரில் வீசிய பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டார். அது போல் பூந்தமல்லியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அது போல் ஆண்டிப்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 45 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம்!
    முதல்வர் விஜய் அவர்களின் அர்த்தமற்ற மௌனம், பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது!
    மௌனத்தை கலைத்திடுங்கள்; ஆட்சி நிர்வாகத்தை முறைப்படுத்துங்கள்!
    ................................................................

    நேற்றைய தினம் (15.06.2026) ஒரே நாளில் மட்டும், மூன்று வயது முதல் 12 வயது வரையிலான ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அதில் ஒரு குழந்தை படுகொலை செய்யப்பட்ட செய்திகள் நமக்கு மட்டுமல்ல; தமிழகமெங்கும் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழ்ந்த கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் புலம்பெயர் தொழிலாளியின் 3 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார்; பூந்தமல்லியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி, தாம்பரம் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, திருவள்ளூர் பகுதியில் 7 வயது சிறுமி, சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்கரம் என தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் நாம் ஒரு நாகரீக சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என எண்ணும் வகையில் கொடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    எந்தெந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஏழை, எளிய தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்களோ... அவர்கள் அந்தப் பெண் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்!

    1 ½ லட்சம் காவலர்களை வைத்தும், 2,500 பேரைக் கொண்ட 'சிங்கப்பெண்கள்' சிறப்புப் படையை வைத்தும் என்ன பலன்? தான் முதலமைச்சராக வேண்டுமென்ற கனவு நிறைவேறினால் மட்டும் போதுமா? தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்?

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை உங்களின் கைகளில் உள்ளது. நீங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரம் இது. நீங்கள் மக்களோடும் நிர்வாகத்தோடும் நேரடி தொடர்பில்லாமல் இருப்பதும், உங்களின் அர்த்தமற்ற மௌனமும் பெரிய பெரிய பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதே போன்று விரும்பத்தகாத எவ்வளவோ நிகழ்வுகள் நடந்துவிட்டன. தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள், மெல்ல மெல்ல சட்டம் ஒழுங்கு உங்களின் கைகளில் இருந்து நழுவுவதை உணர முடிகிறது.

    உங்கள் இடத்தை தகுதியற்ற எவரையும் வைத்து நிரப்ப எண்ணாதீர்கள். இது கட்சிப் பொறுப்பல்ல; நீங்கள் ஒரு ரசிகர் மன்றத்தின், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மட்டுமல்ல; 7 ½ கோடி தமிழக மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க வேண்டிய அரசு பொறுப்பில் உள்ளவர்; அதைத் தட்டிக் கழிக்காதீர்கள்; மௌனத்தை கலைத்திடுங்கள்; ஆட்சி நிர்வாகத்தை முறைப்படுத்துங்கள். ஆட்சிப் பொறுப்புக்கு வருவது கடினம்; ஆனால், கண்மூடி கண் திறப்பதற்குள் அது போய்விடும். எச்சரிக்கையோடும் பொறுப்போடும் இனியாவது விழித்துக் கொண்டு செயல்படுங்கள்; குழந்தைகள், பெண்கள் மற்றும் பிற குடிமக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திடுங்கள்!

    டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
    நிறுவனர் & தலைவர்
    புதிய தமிழகம் கட்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former Chief Minister Stalin highlighted reports of 12 sexual violence incidents within 24 hours in Chennai and surrounding areas and questioned Chief Minister Vijay on when public safety concerns would receive priority attention.