“ஆபத்து.. மக்கள்தொகைக் கணக்கெடுப்பே மொத்தமாக வீணாகிவிடும்” - ஸ்டாலின் வைத்த முக்கியமான கோரிக்கை!

  • சென்னை: குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Advertisement

    மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) சாதி விவரங்களைப் பதிவு செய்ய மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்கூட்டியே பட்டியலிடப்பட்ட சாதிப் பெயர்கள் இன்றி, பொதுமக்கள் கூறுவதை அப்படியே பதிவிடும் 'Open-ended format' முறையானது கடுமையான குளறுபடிகளுக்கே வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போது எடுக்கப்பட்டு வரும் Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட 'open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu' முறையை மத்திய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

    ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று மத்திய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல! மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.

    Advertisement

    இதனால் இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான்.

    அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், மத்திய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.

    Advertisement

    தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது. பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    DMK leader MK Stalin has urged that a caste-wise census be conducted without any irregularities and that a resolution be passed in the Assembly to safeguard the rights of OBCs.