ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு

  • சென்னை: ஒரு தலைவர் அப்படிதான் இருக்க முடியும், வருகிறவர் போகிறவர் எல்லாம் ஒரு அதிகாரம் கொண்ட தலைவனை உபயோகப்படுத்திக் கொள்ள பார்ப்பார்கள், அதற்கு இடம் கொடாமல் புத்திசாலித்தனமாக தனக்கு என்ன தேவையோ, தன் கட்சிக்கு என்ன தேவையோ அதை செய்பவன் ஒரு நல்ல தலைவனே, அதனால் அதில் கலைஞரை குறைசொல்ல மாட்டேன். ஆனால் ஸ்டாலின் அவருக்கு நேர்மாறாக இருந்தார். எல்லோரும் அவரை உபயோகப்படுத்தி கொண்டனர் என்று திமுக ஆதரவாளர் விஷ்வாக் நேசன் என்பவர் வெளியிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் பல திமுக ஆதரவாளர்களால் பகிரப்படுகிறது. அவரது பதிவினைஅவரது வரிகளில் அப்படியே பார்ப்போம்.

    Advertisement

    "கலைஞரை பற்றி சொல்லும்போது எவரை எப்படி உபயோகிக்க வேண்டும், உபயோகித்தபின் எவரை எங்கே வைக்க வேண்டும் என்று தெளிவாக தெரிந்தவர் என்பர். அவரது பிரபல வசனமான இதயத்தில் இடம் கொடுத்த நிகழ்வெல்லாம் இப்படியான ஒரு விஷயம்தான். இதை தவறு என்று சொல்ல முடியாது, ஒரு தலைவர் அப்படிதான் இருக்க முடியும், வருகிறவர் போகிறவர் எல்லாம் ஒரு அதிகாரம் கொண்ட தலைவனை உபயோகப்படுத்திக் கொள்ள பார்ப்பார்கள், அதற்கு இடம் கொடாமல் புத்திசாலித்தனமாக தனக்கு என்ன தேவையோ, தன் கட்சிக்கு என்ன தேவையோ அதை செய்பவன் ஒரு நல்ல தலைவனே, அதனால் அதில் கலைஞரை குறைசொல்ல மாட்டேன்.

    Advertisement

    கலைஞருக்கு நேர்மாறாக இருந்த ஸ்டாலின்

    ஆனால் ஸ்டாலின் அவருக்கு நேர்மாறாக இருந்தார். எல்லோரும் அவரை உபயோகப்படுத்தி கொண்டனர், நன்றாகவே.. கூட்டணி கட்சியினரில் ஆரம்பித்து சிறுபான்மையின பிரதிநிதிகள், தொழில்துறையினர், சினிமாக்காரர்கள் எல்லோருமே நன்கு பயன்படுத்திகொண்டனர். அதில் சிறப்பு திறன் காட்டியவர்கள் காங்கிரசினர்.

    காங்கிரஸ் நிலைமை அதளபாதாளம்

    2014ல் காங்கிரஸ் தமிழகத்தில் அதளபாதாளத்தில் இருந்தது. இலங்கை பிரச்சனையில் இருந்து 2009ல் இருந்தே காங்கிரஸ் மேல் தமிழகத்தில் பெரிய கோவம் இருந்தது, அதை சீமான் போன்ற தமிழ் தேசியர்கள் ஊர் ஊராக பொறிபறக்க பேசி பேசி காங்கிரஸ் எதிர்ப்பை உச்ச ஸ்ருதியில் வைத்திருந்தனர். அக்காலக்கட்டத்தில் தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுவிடுவார்கள், வருடத்திற்கு பலர் இப்படி தொடர்ச்சியாக சுட்டு கொல்லப்பட்டனர், ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு புல்லை கூட பிடுங்கி போட்டதில்லை, அதுவும் இதோடு பேசப்பட்டது, இன்று மீனவர் படுகொலைகள் இல்லையாதலால் பலருக்கும் இது நினைவில் இல்லை. அப்படி தமிழகத்தில் முழுக்கவே ஆண்டி- காங்கிரஸ் அலை இருந்த காலகட்டம் 2009-2016 வரை.

    Advertisement

    ஸ்டாலினால் காங்கிரஸ் உயிர்த்தெழுந்தது

    கூடா நட்பு கேடாய் முடியும் என கலைஞர் காங்கிரஸ் உறவை விளக்கியபின் ஆதரவில்லாமல்தான் இருந்தார்கள். பின்னர் சில வருடங்கள் கழித்து ஸ்டாலினுடன் கூட்டணி வைத்த பிறகே அவர்கள் மறுபடியும் உயிர்த்தெழுந்தது. அப்படி காங்கிரசை உயிர்த்தெழ வைக்க திமுக முழுமையாக பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தது.

    பாஜக எதிர்ப்பு

    திமுக பாஜகவை எதிர்ப்பது புதிததல்ல, கலைஞர் காலதிலேயே, 99-2004 வரை கூட்டணியில் இருந்த காலத்தை தவிர்த்து மற்ற நாட்களில் பாஜகவுக்கு எதிர்முகாமில்தான் கலைஞர் இருந்தார், பண்டாரங்களின் கட்சி என்றெல்லாம் சொன்னாலும் அவரது பாஜக எதிர்ப்பு ஒரு அரசியல் கட்சி எதிர்ப்பு என்ற நிலையிலேயே இருந்தது. அரசியலில் நிலையான நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதை புரிந்து வைத்திருந்தார். அதனால்தான் மோடி கலைஞரின் இறுதி சடங்கிற்கு வந்தார், அவர் சுகவீனமாக இருந்த போது உடல்நலன் விசாரித்தார்.

    Advertisement

    இங்குதான் ஸ்டாலின் கலைஞரில் இருந்து வேறுபடுகிறார், காங்கிரசுடன் கூட்டணி அமைந்ததும் காங்கிரசின் விசுவாச தளபதியாக மாறிவிட்டார், காங்கிரசை விட அதன் பாஜக எதிர்ப்பை அதீதமாக கைகொண்டார். நியாயமாக மாநிலத்தில் தனக்கு எதிரான அதிமுக எதிர்ப்பு அரசியலை முற்றிலும் கைவிட்டு பாஜகவால் அதிமுகவை எதிர்க்கிறேன் என புதுமாதிரியான அரசியலில் இறங்கினார். தனிப்பட்ட முறையில் மோடி, அமித்ஷா எதிர்ப்பில் தீவிரமாக இறங்கி ஒரு அளவுக்கும் அதீதமாக சென்றனர்.

    ராகுலை ஏற்க வைத்தவர் ஸ்டாலின்

    அதில்லாமலே அவர்களுக்கு 2021ல் வெற்றி கிடைத்திருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் ராகுலை தமிழகத்தில் ஏற்க வைத்து, அவரை ஹீரோவாக பிரச்சாரம் செய்ததும் திமுக இணைய அணியே. ஈழ பிரச்சினையில் சோனியா குடும்பத்தின் மீது தமிழகம் கொண்டிருந்த மொத்த கோபத்தையும் மட்டுபடுத்தி ராகுலுக்கு தமிழகத்தில் இன்றிருக்கும் ஒரு ஏற்பை உருவாக்கினர். இப்படியாக தன்னை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள முழு ஒத்துழைப்பை நல்கியவர் ஸ்டாலின்.

    Advertisement

    பெரிய ஆஃபர் கிடைத்ததும் போய்விட்டார்கள்

    மக்கள் நலக்கூட்டணியும் தனியாக தோற்றபின் திமுக கூட்டணிக்கு வந்தார்கள், நல்ல பலன் பெற்றார்கள், அடுத்த பெரிய ஆஃபர் கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்றுவிட்டார்கள். அதை பற்றி பேசினால் இன்னொரு பெரிய கதையாகிவிடும். ஆனால் ஒன்று சொல்லலாம் தலித் அரசியலில் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற பல தலைவர்களை ஒதுக்கி திருமாவிடம் மொத்தமாக கொடுத்ததில் திமுகவின் பங்கும் இல்லாமல் இல்லை என்பதை மறுக்க முடியாது. கம்யூனிஸ்ட்களுக்கு செலவுக்கு பணமும் கொடுத்து தொகுதி வேலையும் செய்து சட்டசபை, பாராளுமன்றங்களில் கொன்டு சேர்த்ததும் இவர்களே. இப்படியாக மக்கள் நலக்கூட்டணியும் திமுகவிடம் பலனடைந்தவர்களே.

    Advertisement

    ஸ்டாலின் வெள்ளந்தி

    இவ்வளவு செய்தும் எல்லாரும் முதல் சந்தர்ப்பத்திலேயே திமுகவை விட்டு விலகி போகிற அளவுக்குதான் ஸ்டாலினின் அரசியல் இருந்திருக்கிறது. அவர்தான் கொஞ்சம் வெள்ளந்தியாக இருந்துவிட்டார். அரசியலில் நான்கு பக்கமும் கண்கள் வேண்டும், எட்டு திசைகளிலும் தேர்ந்தெடுக்க கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்" இவ்வாறு அந்த பதிவில் திமுக ஆதரவாளர் விஷ்வாக் நேசன் கூறியுள்ளார்.

    English Summary

    DMK supporter Vishwaak Nesan's viral post states a smart leader like Kalaignar protects party interests from opportunist allies (Congress, VCK, Left), while Stalin was too naive and got exploited.