சென்னை: பாஜகவை எதிரி என்று கூறும் விஜய், இதுவரை அந்தக் கட்சியின் எந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடியிருக்கிறாரா? வந்தே மாதரம் பாடுவதிலும், தேசியம் பேசுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டும் அவருக்கு, திராவிட கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்" என்று பிரபல எழுத்தாளரும், மூத்த அரசியல் விமர்சகருமான ராஜகம்பீரன் பேட்டி ஒன்றில் விமர்சித்துள்ளார்.
Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "அரசியலை ஒரு சினிமா ஸ்கிரிப்ட்டாக கருதுகிறார் விஜய்... அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையிலான வேறுபாடு அவருக்கு தெரியவில்லை. ஒரு அரசியலை எப்படி அணுக வேண்டும் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அரசியல் என்பது தனி மனிதப் பகை அல்ல.. முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தை வீழ்த்துவது அரசியல் ஆகாது.
அனைத்து அரசுகளிலும் பிழைகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். திமுக ஆட்சியைத் தூய்மையானது என்று சொல்லவில்லை, ஆனால் முறைகேடுகள் நடந்தால் அதை நிர்வாக ரீதியாக விமர்சிக்க வேண்டும். மாறாக, பாஜக அதிமுகவை சிதைத்தது போல, திமுகவை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். இதை செய்யவே அவர் ஸ்டாலினை வில்லனாக்குகிறார். நிர்வாக சிக்கல்கள் மற்றும் பிழைகள் அனைத்து ஆட்சிகளிலும் இருப்பது இயல்பு. அதைத் தாண்டி, "திமுக ஆட்சியில் மட்டும் தான் ஊழல் நடக்கிறது, அதிமுகவினர் செய்வது ஊழல் இல்லை" என்ற இரட்டை நிலைப்பாட்டை விஜய் எதன் அடிப்படையில் முன்வைக்கிறார்? ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர், முதலில் தனது கட்சி நிர்வாகிகளிடமும், கூட்டணி வைக்கும் அதிமுகவினரிடமும் உள்ள ஊழல் புகாரை விசாரித்துவிட்டுப் பேச வேண்டும். பாஜகவை எதிரி என்று கூறும் விஜய், இதுவரை அந்தக் கட்சியின் எந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடியிருக்கிறார்? வந்தே மாதரம் பாடுவதிலும், தேசியம் பேசுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டும் அவருக்கு, திராவிட கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். கடவுள் என்ற பெயரில் பெண்களைத் தேவதாசிகளாக மாற்றியதும், உழைப்பவர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதியதும் சமூகக் கொடுமைகள். ஆனால், பெரியார் எப்போதுமே சாமி கும்பிடுவதை எதிர்க்கவில்லை.. அந்தச் சாமி பெயரைச் சொல்லி மக்களைச் சுரண்டியதையும், ஒடுக்கியதையுமே எதிர்த்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கருத்தை முதன்முதலில் விதைத்தவர் பெரியார்.. ஆலயங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து சென்றவர் பெரியார்.. ஆனால், இன்று பெரியாரைப் பற்றிப் பேசும் விஜய், தனது கட்சி சார்பாகப் பெரியார் குறித்து எத்தனை மாநாடுகளை நடத்தி உள்ளார்? பாஜகவின் திட்டங்களை ரகசியமாக நிறைவேற்றுவதற்கு துணையாக செயல்பட்டுக்கொண்டு, திமுகவை வீழ்த்தப் பார்ப்பது பாஜகவின் அஜெண்டா அல்லவா? இதில் விஜய்க்குத் தனித்துவமான கொள்கையோ, தத்துவமோ அல்லது தலைமைப் பண்போ எதுவுமே இல்லை. ஓடு ஓடு ஓடு என்றால் என்ன அர்த்தம்? பத்திரிகையாளர்களை சந்திக்காமல்,அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் இருப்பது அழகல்ல.. 41 உயிர்கள் பலியான விபத்தின் போது காட்டிய அலட்சியமும், காவல் துறையைக் குறை சொல்வதும் பொறுப்பற்ற செயல். அதிகார அமைப்புகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் பின்னணியில் இருக்கும்போது, ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பைக்கூட நிகழ்த்தாமல்,எப்படி தமிழ்நாட்டை ஆள முடியும்? வெறும் சினிமாத் தனமான நடிப்பையும், வசனங்களையும் தாண்டி, அரசியல் முதிர்ச்சியும் தலைமைப் பண்பும் இல்லாத எவராலும் நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க முடியாது" என்றெல்லாம் கருத்து கூறியிருக்கிறார்.அதிமுக ஆட்சியில் ஊழலே இல்லையா
பெரியார் குறித்து மாநாடுகள் எத்தனை
ஓடு ஓடு ஓடு என்றால் ?