ஸ்டாலின் போட்ட நங்கூரம்.. 2029-க்காக கனிமொழி இப்போதே ஆட்டம் ஆரம்பம்! கதிகலங்கும் காங்கிரஸ், பாஜக?

  • சென்னை: காங்கிரஸ், பாஜக என்று 2 பெரிய கட்சிகளை விட்டுவிட்டு, மற்ற மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒன்றாக சேர்க்க முடியுமா என்ற யோசனை திமுகவுக்குள் பேசப்படுவதாக கூறப்படுகிறது... அப்படியொரு அணி உருவானால், அதில் யார் யார் வருவார்கள்.. யார் தலைமை வகிப்பார்கள்.. என்பதெல்லாம் இப்போதைக்கு தெரியாது. ஆனால், அதற்கான பேச்சை தொடங்குவதற்கான வேலையை கனிமொழி ஆரம்பித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகள் எழுந்துள்ளன...!!!

    Advertisement

    முதலில் மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்தித்துள்ளார் கனிமொழி... அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பில் அனில் தேசாய், மிலிந்த் நர்வேகர் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சில் இருந்துள்ளனர்.

    Advertisement

    காங்கிரஸ் - பாஜக

    நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பது பற்றியும், இதனால் தென் மாநிலங்களுக்கு வரக்கூடிய பாதிப்பு பற்றியும் இவர்கள் பேசியிருக்கிறார்கள். அத்துடன், மற்ற மாநிலக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பேச முடியுமா என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தொகுதி மறுசீரமைப்பு ஏன் இவ்வளவு முக்கியம் என்றால், எதிர்காலத்தில் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்ற தொகுதிகள் மாற்றப்பட்டால், எந்த மாநிலத்துக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதிலும் மாற்றம் வரலாம். அப்படியானால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான், தமிழகம் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களின் கட்சிகளையும் இதில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு வருகிறது.

    Advertisement

    கனிமொழி ஆரம்பித்த அரசியல்

    இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது..,. சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொண்டது.. ஆனால் திமுக கலந்து கொள்ளவில்லை. மகாராஷ்டிராவிலும் உத்தவ் தாக்கரே கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

    எனவே, காங்கிரசுடன் இருக்கும் கட்சிகள் மட்டுமல்ல.. காங்கிரசுடன் அடிக்கடி உரசல் இருக்கும் கட்சிகளையும் ஒன்றாக பேச வைக்க முடியுமா என்ற முயற்சியா இது என்ற கேள்வி எழுகிறது.

    மூன்றாவது அணி

    அதற்கேற்பத்தான் கனிமொழியின் அடுத்தடுத்த சந்திப்புகளும் அமைந்துள்ளன. உத்தவ் தாக்கரேவை தொடர்ந்து சரத் பவார், சுப்ரியா சுலே ஆகியோரையும் அவர் சந்தித்துள்ளார். அடுத்ததாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் மாநிலம் மாநிலமாக சென்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவும் கனிமொழியும் நெருங்கிய தோழிகள் என்பதால், அந்த சந்திப்புக்கும் தனிப்பட்ட நெருக்கம் இருக்கிறது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் முடிந்த பிறகு மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்திக்க போவதாகவும் சொல்கிறார்கள்.. மும்பை, டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் என ஒவ்வொரு மாநிலமாக இந்த சந்திப்புகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

    திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்

    உண்மையிலேயே இந்த நகர்வுகள் திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாகவே அமையலாம்.. காரணம், ஸ்டாலின் முதல்வராக இருந்த காலத்திலேயே பல மாநில தலைவர்களுடன் நல்ல அரசியல் உறவை உருவாக்கி வைத்து விட்டார்.. மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி, கேரளா பினராயி விஜயன், உத்தரபிரதேசம் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீரின் உமர் அப்துல்லா என பல தலைவர்களுடன் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது.

    Advertisement

    அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தமிழகத்துக்கு வந்து திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்தார். தேர்தல் முடிவில் திமுக தோல்வியடைந்தபோது, அகிலேஷ் யாதவும் ஸ்டாலினுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்..

    எனவே, கனிமொழி இப்போது புதிதாக எல்லோரிடமும் சென்று உறவை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஸ்டாலினுக்கு ஏற்கனவே பல மாநில தலைவர்களுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. அந்த பழக்கத்தை வைத்து, அடுத்தகட்ட அரசியல் பேச்சை எளிதாக தொடங்க முடியும். இதுதான் திமுகவுக்கு இப்போது இருக்கும் ஒரு முக்கியமான பலமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    திமுக முயற்சிக்கு பெரிய பலம்

    அதேபோல, 2029 தேர்தல் வரும்போது திடீரென கூட்டணி பேசுவதற்கு பதிலாக, இப்போதே ஒவ்வொரு மாநிலத்திலும் யார் இருக்கிறார்கள்.. யாருடன் நெருக்கமாக இருக்கலாம்.. யாருடன் சேர்ந்து ஒரு விஷயத்தில் குரல் கொடுக்கலாம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது திமுகவுக்கு கண்டிப்பாக உதவும்.

    குறிப்பாக, காங்கிரசுடன் இருக்கும் கட்சிகள் மட்டுமல்ல.. காங்கிரசுடன் அடிக்கடி உரசல் இருக்கும் கட்சிகளையும் ஒரே இடத்தில் பேச வைக்க முடிந்தால்.. அதுதான் இந்த முயற்சியின் அடுத்த பெரிய பலமாக இருக்கலாம்.

    தவெக பிளான் என்ன

    திமுக தேசிய அளவில் இப்படி தனது தொடர்புகளை அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் தவெகவும், தனது இடத்தை வலுப்படுத்த பார்க்கிறது. அதனால் திமுக டெல்லி பக்கம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழக அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    அதற்காக 3வது அணி உருவாகிவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால், கனிமொழியின் இந்த தொடர் சந்திப்புகளை வெறும் மரியாதை சந்திப்புகளாகவும் கடந்து செல்ல முடியாது. 2029 தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது.. அதற்குள் இந்த சந்திப்புகள் எந்த அளவுக்கு நகர்கின்றன? யார் யார் திமுக பக்கம் வருகிறார்கள்? இந்த அரசியல் கணக்கு எந்த பக்கம் செல்கிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

    English Summary

    Stalin's Masterstroke: Kanimozhi Begins 2029 Political Game Early, Unsettling Congress & BJP!