ஸ்டாலின் நிழலில் இயங்கும் விசிக, இடதுசாரிகள்? விஜய் அரசு அதிமுக பக்கம் சாயும் அபாயம் உள்ளதா?

  • சென்னை: விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், விசிக, இடதுசாரி கட்சிகளின் நகர்வை மூத்த பத்திரிகையாளர் மணி மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.. திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கட்சிகள், அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், இத்தகைய முரண்பட்ட நிலைப்பாடுகள் தொடர்ந்தால், விஜய் அரசு அதிமுகவின் ஆதரவை நாட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் மணி காட்டமாக விமர்சித்துள்ளார். மணி சொல்லும் இந்த கூற்று சாத்தியமா?

    Advertisement

    மூத்த பத்திரிகையாளர் மணி சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வரும் விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்..

    Advertisement

    பிளாக்மெயில் அரசியல்

    இது குறித்து அவர் பேசுகையில், "இடதுசாரிக் கட்சிகளும் விசிகாவும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தினம் தினம் பிளாக்மெயில் செய்து வருகின்றன.. சனாதன எதிர்ப்பு மற்றும் பாஜாக எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்கை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறும் இவர்கள், அதே அளவுகோல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கும் பொருந்தும் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள் என்று புரியவில்லை.

    மக்கள் விஜயை நிராகரித்துவிட்டதாகக் கூறும் இவர்கள், அதே விஜயை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய முரண்பாடு.. முழுக்க முழுக்க திமுகவின் எடுப்பார் கைப்பிள்ளைகளாகச் செயல்படும் இந்தத் தோழமைக் கட்சிகள், விஜய் அரசு நீடித்துவிடக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கின்றன.

    Advertisement

    அரசின் ஸ்திரத்தன்மைக்குத் தேவையான அமைச்சரவை பங்கீட்டை ஏற்க மறுத்துவிட்டு, வெளியில் இருந்து கொண்டு ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று அடிக்கடி மிரட்டுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல.. இப்படி இம்சித்துக் கொண்டே இருந்தால், வேறு வழியின்றி விஜய் அவர்கள் அதிமுகவின் ஆதரவை நாடும் நிலைக்குத் தள்ளப்படுவார்..

    விசிக வாக்குகளை 80 சதவீதம் பிரித்த தவெக

    அப்படி ஒரு சூழல் உருவானால் அதற்கு முழுக்க முழுக்க இடதுசாரிகளும் விசிகாவுமே பொறுப்பேற்க வேண்டும்.. விசிவின் வாக்கு வங்கியில் 80 சதவீதத்திற்கும் மேல், இப்போதே விஜய் பக்கம் சென்றுவிட்டது என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.. கட்சி அரசியலில் காலாவதியாகிவிட்டதை மறைக்கவே திருமாவளவனும் அவரது கட்சியினரும் குழப்பமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    அதிகார வேட்கைக்காகவும், திமுகவின் பிடியிலிருந்து மீள முடியாத சூழலிலும் இவர்கள் எடுத்து வரும் இத்தகைய முரண்பட்ட நிலைப்பாடுகள், இறுதியில் இவர்களின் அரசியல் சரிவுக்கே வழிவகுக்கும்.. 2006-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த கட்சிகள், இப்போது ஏன் விஜய் அரசை மட்டும் தினம் தினம் மிரட்டுகின்றன? இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல்.

    திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பெயரிலேயே இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் திமுகவின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறிவிட்டதாக சொல்கிறார்கள்.

    விசிக அமைச்சரவை

    விசிக அமைச்சரவையில் இணைய மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் திருமாவளவன், தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்கிறார்கள்.. இவ்வளவு தூரம் விஜய் அவர்களிடம் அவர்கள் மன்றாட வேண்டிய அவசியம் இல்லை.. ஆதரித்தால் ஆதரியுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட வேண்டும.

    Advertisement

    தினமும் விசிகவும், 2 இடதுசாரிகளும் இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமாக, தவெகவை அதிமுக பக்கம் நன்றாகவே தள்ளிவிடுவார்கள். ஆட்சியைத் தக்கவைக்க விஜய்க்கு ஒரே ஆப்ஷன், பாஜகவிடம் சரணடையும் நிலைமைக்கும் போகலாம். அதற்கு முழுக்க முழுக்க இடதுசாரிகளும் விசிகவுமே காரணம்..

    அதிகாரத்தை இழந்த அந்த அதிர்ச்சியில் இருந்து மீள மறுக்கும் திமுக, உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது.. 2 இடதுசாரிகளும் தங்களுடைய சுயத்தன்மையை இழந்து, திமுகவின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிட்டார்கள்.. இப்படி அடிக்கடி ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பிளாக்மெயில் செய்யும் ஆரோக்கியமற்ற அரசியல்..

    Advertisement

    அரை சதவீதம், கால் சதவீதம் வாக்கு வங்கி

    ஏற்கனவே மக்கள் மன்றத்தில் இவர்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டார்கள்.. திமுகவின் தயவால் கிடைத்த 2 இடங்களையும் அடுத்த தேர்தலில் இவர்கள் இழப்பார்கள் என்பது உறுதி.. ஒரு சதவீதத்திற்கும் குறைவான, அரை சதவீதம், கால் சதவீதம் வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இந்தக் கட்சிகள், 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சியைத் தினமும் மிரட்டிப் பார்ப்பது மக்கள் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.

    விஜய் வெளிப்படையாகவே, நீங்கள் எல்லோரும் அமைச்சரவையில் இடம் பெறுங்கள், உங்களுடைய ஆதரவோடுதான் நான் ஆட்சி நடத்துகிறேன் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.. இதைத்தான் மக்கள் நியாயம் என்று கருதுகிறார்கள்.

    ஆனால், ஒரு காலத்தில் அதிகாரத்தில் பங்கு கொடுக்க மறுத்த திமுக எங்கே, தற்போது இவர்களை அமைச்சரவையில் சேருமாறு வெற்றிலை பாக்கு வைத்து கூவி கூவி அழைக்கும் தவெக எங்கே?அமைச்சரவைக்குள் சென்றால் மட்டுமே அரசுக்கு ஸ்திரத்தன்மை இருக்கும், இல்லையெனில் இதுபோன்ற பிளாக்மெயில் அரசியல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    சமரசங்கள் நடக்குமா

    பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு வலுவான பார்வையாக இருந்தாலும், இது சாத்தியமா என்பது விஜய் மற்றும் கூட்டணி கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே அமையும்.

    குறிப்பாக, விஜய் தனது அமைச்சரவையை விரிவாக்க எந்த மாதிரியான அரசியல் சமரசங்களைச் செய்யப்போகிறார் மற்றும் விசிக, இடதுசாரிகள் தங்களின் பிடிவாதத்தைக் கைவிட்டு அமைச்சரவையில் இணையத் தயாராவார்களா அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறுவார்களா என்பதைப் பொறுத்தே இந்த ஊகம் மெய்யாகும்.

    இருந்தாலும், விஜய் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய முயற்சிப்பதும், கூட்டணி கட்சிகளின் பிளாக்மெயில் அரசியலை எதிர்கொள்வதும் தமிழக அரசியலில் புதியதொரு மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை., பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Stalin's shadow over VCK and Left parties: Will Vijay's government be forced to join hands with AIADMK?