கொஞ்சம் பொறுத்துக்கோம்மான்னு சொல்றதை முதல்ல நிறுத்துங்க!.. பெற்றோர்களுக்கு ஹைகோர்ட் போட்ட போடு

  • சென்னை: "பெண் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனை வரும்போது "அனுசரிச்சு போம்மா'ன்னு சொல்றதை முதல்ல நிறுத்துங்க!" என்று அலகாபாத் ஹைகோர்ட் கண்டிப்புடன் கூறியிருக்கிறது.. உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு வரதட்சணை கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.. நீதிமன்றத்தின் இந்த அட்வைஸ்தான், அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

    Advertisement

    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மீனா தேவி... 25 வயதாகிறது.. இவருக்கும் தினேஷ் குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

    Advertisement

    உத்தரபிரதேசம் தம்பதி

    பெண்ணின் வீட்டில் தங்கள் சக்திக்கு மீறி 2.26 லட்சம் ரூபாய் பணத்தை வரதட்சணையாக கொடுத்து தான் மகளை அனுப்பி வைத்தார்கள். ஆனால், திருமணமான கொஞ்ச நாளிலேயே தினேஷ் குமார், அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களின் வரதட்சணை டார்ச்சர் ஆரம்பமானது.. "கூடுதலாக ஒரு பைக் வேணும், அதுபோக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வேணும்" என்று கேட்டு மீனா தேவியை தினந்தோறும் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை, மீனா தேவி போன் மூலமாகவும், நேரில் சென்றும், பெற்றோர்களிடம் சொல்லி அழுதுள்ளார். "என்னை எப்படியாவது காப்பாத்துங்கப்பா" என்று கெஞ்சியுள்ளார். ஆனால், பெற்றோரோ, "குடும்பம்னா இதெல்லாம் சகஜம்மா.. புருஷன் வீட்டுல கொஞ்சம் பொறுத்துப்போ, நாளடைவில் எல்லாம் சரியாயிடும்" என்று சமாதானம் சொல்லி, மறுபடியும் அந்த நரகத்திற்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் மேலும் மனம் நொந்து போனார் மீனாதேவி..

    Advertisement

    காப்பாத்துங்கப்பா - கதறிய மகள்

    இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு, மீனா தேவியும் அவருடைய 15 மாதப் பிஞ்சுக் குழந்தையும் தினேஷ் குமார் வீட்டில் உடம்பெல்லாம் படு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மனைவியையும், கைக்குழந்தையும் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட இந்த வழக்கில் மீனாவின் கணவர் தினேஷ் குமார்கைதானார்.. இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், தினேஷ் குமார் உட்பட அவருடைய குடும்பத்தினர் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

    இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் அலகாபாத் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ராஜேஷ் சிங் சவுகான் மற்றும் அப்தேஷ் குமார் சௌதரி அடங்கிய அமர்வு, "பெண்கள் பயத்தோடும் அவமானத்தோடும் பாதுகாப்பு கேட்டுத் தன் பெற்றோர் வீட்டை அணுகும்போது, அதை சாதாரண குடும்பத் தகராறாக பார்க்காதீர்கள். அது அவர்களின் உயிர் வாழ்வதற்கான கடைசி உதவிக்குரல்..

    Advertisement

    அலகாபாத் ஹைகோர்ட் போட்ட போடு

    பெற்றோர்கள் சொல்லும் இந்த "அனுசரித்துப்போ" என்ற தவறான வார்த்தைதான், குற்றம் செய்பவர்களுக்கு இன்னும் துணிச்சலைக் கொடுத்து, அந்தப் பெண்ணின் உயிரையே பறிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. தாமதமான வருத்தமும், நீதிமன்ற வழக்குகளும் இழந்த ஒரு உயிரை மீட்டுத் தந்துவிடாது. ஆபத்து நடக்கும் முன்பே காப்பாற்றுவதுதான் குடும்பத்தின் தார்மீகப் பொறுப்பு" என்று நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றியுள்ளனர்.

    கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனைக்கான போதிய காரணங்களை விரிவாகப் பதிவு செய்யாததால், குற்றவாளிகள் ஏற்கனவே ஜெயிலில் கழித்த காலத்தையே தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டாலும், உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள், தங்கள் மகள்களை அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் இடியென இறங்கியுள்ளது...!!

    English Summary

    "Stop Asking Daughters to 'Adjust'".. Allahabad High Court Slams Parents in Dowry Death Case