சென்னை: ''தெருநாய் கடிக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.தெருநாய் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என்று தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தெருநாய்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
குறிப்பாக கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சை அளித்து பராமரிப்பு மையங்களுக்கு தெருநாய்களை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தெருநாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் போட்ட இந்த உத்தரவு முறையாக செயல்படுத்துவது தொடர்ந்து அனைத்து உயர்நீதிமன்றங்களும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் (எஸ்.ஏ.) தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதன்படி, ''தெருநாய் கடிக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தெருநாய் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற மாதந்தோறும் அறிக்கை அளிக்க தெரிவித்துள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நடவடிக்கை எடுத்ததாக அறிக்கையில் தகவல் இருக்கலாம். ஆனால் நேரில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருநாய்களில் கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. நீதிமன்ற வளாகத்திலேயே தெருநாய்களால் நிறைய தொல்லைகள் உள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த வேளையில் தமிழக அரசு சார்பில், ''அறிக்கை தயாராக உள்ளது. அதனை தாக்கல் செய்ய ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும்'' என்று அனுமதி கோரப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு, இந்த வழக்கை ஜூன் 30ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.