சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள்” - கொந்தளித்த சு.வெங்கடேசன்!

  • சென்னை: 'சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை மெட்ரோ ரயில்களில், பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெறும். அந்தவகையில் நிதி நிறுவனம் ஒன்றின் விளம்பரம் தற்போது இடம்பெற்றுள்ளது. அதில், "கேர்ள் ஃப்ரெண்டால் ஆதாயம் இல்லை.. எங்கள் FD வட்டியில் அதிக ஆதாயம்" எனக் குறிப்பிடும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இது குறித்து சு.வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்துக்கு எதிரானதாகவும் உள்ளன.

    குறிப்பாக, மெட்ரோ ரயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், "Girlfriend 0% வட்டி தரலாம்... எங்கள் FD 14.40% வட்டி தரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான ஆணாதிக்க மனப்பான்மையையும் பிரதிபலிக்கிறது.

    Advertisement

    பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்துக்குரியது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது. இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனை காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    CPIM MP Su Venkatesan has stated that certain advertisements displayed inside Chennai Metro stations and trains are demeaning to women and run counter to the values ​​of a civilized society.