முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கிய துறை? தவெக அரசுக்கு எஸ்டிபிஐ தந்த அழுத்தம்.. அமைச்சரவையில் மாற்றம்?

  • சென்னை: முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்க வேண்டும் என்று தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழக அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எஸ்டிபிஐ கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் இது குறித்த அறிக்கையானது, சிறுபான்மையினருக்கான தகுந்த பிரதிநிதித்துவத்தையும் அதிகாரப் பகிர்வையும் வலியுறுத்துகிறது. சமூக நீதியின் அடிப்படையில் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு முக்கிய துறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் முன்வைத்துள்ளார்.

    Advertisement

    எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னுடைய கோரிக்கை குறித்த அவசியத்தையும் விரிவாக கூறியிருக்கிறார்.

    Advertisement

    அதில், "தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.

    அதேசமயம், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

    தவெக அமைச்சரவை

    அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.

    Advertisement

    எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு முக்கிய பதவி

    மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும்.

    அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்வர் அவர்கள் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    எஸ்டிபிஐ கோரிக்கை அவசியமானதா?

    எஸ்டிபிஐ வலியுறுத்தி உள்ள இந்த கோரிக்கை அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், சமூகநீதி மற்றும் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சரவையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்வது ஒரு ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாகும் என்பதால், எஸ்டிபிஐ கட்சியின் இந்தக் கோரிக்கை அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஒருவேளை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொள்கை முடிவுகளை எடுக்கும் முக்கியத் துறைகள் வழங்கப்பட்டால், அது அந்தச் சமூகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, அரசின் நிர்வாகத்தில் பன்முகத்தன்மையும், உள்ளடக்கிய வளர்ச்சியும் பெருகும்.

    அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட துறைகளுக்குள் மட்டும் சுருக்கப்படாமல், முக்கியப் பொறுப்புகளில் முஸ்லிம் அமைச்சர்கள் அமர்த்தப்படுவது, தமிழக அரசின் சமூகநீதி என்ற முழக்கத்திற்குப் வலுசேர்ப்பதோடு, அனைத்துச் சமூகங்களையும் சமமாக நடத்தும் ஒரு முற்போக்கான முன்னுதாரணமாகவும் அமையும் என்றே கருதப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Sudden Cabinet Changes in TVK Government? Social Justice at Risk? Will Muslim Community Get Key Positions?