டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் அண்மைக்காலமாக எழுந்துள்ள அதிகாரப் பூசல் விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மாற்றம் தொடர்பாக மிக முக்கியமான ஒரு விளக்கத்தையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
வழக்கில் நடந்தது என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துகளைக் கேட்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று ஆணையர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் சட்டப்படி முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தியதாகவும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "செய்தித்தாளில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து நாங்கள் எந்தவொரு நேரடி உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை நாங்கள் கேட்க வேண்டும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதேவேளையில், தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் இடைக்காலக் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாறாக, குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. விசாரணையின் போது தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் "படிவம் 6" மாற்றப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகளின் போது, இந்த படிவத்தில் விதிகளுக்கு மாறாகப் புதிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டதாக மற்ற இரு ஆணையர்களும் முன்னதாக ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இந்த மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமர்வு நேரடியாகப் பதிலளித்து, "மாற்றப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்" என்று திட்டவட்டமாக அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ வரம்பை மீறி படிவத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் 324-வது பிரிவின் கீழ், தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு அமைப்பு. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே முழு அமைப்பின் அதிகாரத்தையும் தனியாகப் பயன்படுத்த முடியுமா, அல்லது மற்ற இரு ஆணையர்களின் கருத்தொற்றுமை அவசியமா என்ற அடிப்படைக் கேள்வி இந்த வழக்கின் மூலம் எழுந்துள்ளது. இந்த சர்ச்சையானது தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரமான செயல்பாடுகள் மீது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ள சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு இருக்கும் ஆகப்பெரிய ஆயுதம் அவனுடைய 'வாக்குரிமை' மட்டுமே. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்களை மாற்றவும், தங்கள் உரிமைகளைக் கேட்கவும் வாக்களிக்கும் உரிமையே அடிப்படை. ஆனால், அந்த வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடக்கும் விவகாரங்கள், நாட்டின் ஜனநாயகத்தின் மீதே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட அதிரடி புலனாய்வு அறிக்கை, தேர்தல் ஆணையத்தின் மோதலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களில் இருவர், கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்கள் எதிர்ப்புகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது ஏதோ அரசு அலுவலகத்தில் நடக்கும் சாதாரண அதிகாரப் போட்டி அல்ல.. நாட்டில் யார் வாக்களிக்கலாம், யாருடைய வாக்கு நீக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறைகளில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) மட்டும் சுமார் 13 கோடிப் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் தகுதியான பல வாக்காளர்களின் பெயர்களும் அமைதியாகக் களையெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சமே இச்சிக்கலின் மையப்புள்ளி ஆகும். ஒரு இளைஞர் அல்லது பொதுமகன் முதல்முறையாக வாக்காளர் அட்டையைப் பெற 'பாரம் 6' (Form 6) விண்ணப்பத்தை நிரப்புகிறார். ஆனால், "உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா?" என்ற தேவையற்ற ஒரு புதிய கேள்வியை அனுமதி இன்றி மென்பொருளில் சேர்த்துள்ளனர். இதற்கு ஆணையர்களே எதிர்ப்பு தெரிவித்தும் அதை நீக்கவில்லை. இதன் விளைவாக, சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த எளிய இளைஞர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்வதே தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டது."செய்தித்தாளை மட்டும் வைத்து முடிவெடுக்க முடியாது"
படிவம் 6 மாற்றம்: "நாங்கள் ஒப்புதல் தரவில்லை"
தேர்தல் ஆணையத்தின் கூட்டு அதிகாரம்
வழக்கு பின்னணி