அரசியலுக்கு வருகிறாரா சூர்யா! 2031ல் விஜய்க்கு போட்டி? விளக்கம் கொடுத்த ரசிகர் மன்றம்!

  • சென்னை: நடிகர் சூர்யா விரைவில் மக்கள் தலைவராக உருவெடுப்பார் என்று, சூர்யா ரசிகர் மன்றத்தின் நிர்வாகி பேசியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் சூர்யாவுக்கு இல்லை என சூர்யா நற்பணி மன்றம் விளக்கம் கொடுத்திருக்கிறது.

    Advertisement

    சூர்யா ரசிகர் மன்ற கூட்டத்தில் பேசிய நிர்வாகி ரா வீரமணி, "நடிகர் சூர்யா விரைவில் மக்கள் தலைவராக உருவெடுப்பார்" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகியிருந்தது. எனவே சூர்யா, முதலமைச்சர் விஜய்க்கு போட்டியாக அரசியலில் உருவெடுக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருந்தது.

    Advertisement

    இப்படி விவாதங்கள் வெடித்த நிலையில், தற்போது ரசிகர் மன்றம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் சூர்யாவுக்கு இல்லை என ரசிகர் மன்றத்தின் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

    அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "அனைத்து ஊடக மற்றும் சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு. இரா.வீரமணி அவர்கள். 'இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

    ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

    Advertisement

    மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு. இரா.வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், திரு.சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.

    மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். எனவே. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல். மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Suriya Has No Intention of Entering Politics: Remarks by an office-bearer of the Suriya fan club—predicting that actor Suriya would soon emerge as a leader of the people—had sparked a debate. Amidst this, the Suriya Welfare Association has clarified that the actor has no intention of entering politics.