சென்னை: கடவுள் முடிவு செய்துவிட்டார்.. சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என ரசிகர் மன்ற நிர்வாகி பேசியதையடுத்து, நடிகர் சூர்யா அரசியலில் களமிறங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என பெரிய விவாதமே நடந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சூர்யா தரப்பு.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, தனது நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல் சமூகப் பணிகளாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். 'அகரம்' அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.
கல்வி, சமூக முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் தொடர்ந்து பங்களித்து வருவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், சென்னை நகரில் நேற்று அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிறப்பு விருந்தினர் வீரமணி, "காலம் முடிவு செய்து விட்டது. கடவுள் முடிவு செய்து விட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்று கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, நடிகர் சூர்யா விரைவில் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்ற தகவல்களும் பரவத் தொடங்கின. பலரும் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்ததால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியது. இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜூன் 28-ஆம் தேதி நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட வீரமணி, அது தனது தனிப்பட்ட கருத்து என்பதை தெளிவாகக் குறிப்பிட்ட பிறகே அந்த கருத்துகளை தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது பேச்சை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, அது நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாகவே வீரமணி நற்பணி இயக்கத்தின் நிர்வாகத்தில் இல்லை என்றும், அவரது கருத்துகளை மன்றத்தின் அதிகாரப்பூர்வ கருத்தாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக, நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித திட்டமோ, எண்ணமோ இல்லை என்று நற்பணி இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலம் சமூக சேவைகளை தொடர்ந்து மேற்கொள்வதிலேயே சூர்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் இருப்பதாகவும், அதுவே அவரது தற்போதைய முழு கவனமாக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நற்பணி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்படும் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் நற்பணி இயக்கம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. சமீப காலமாக பல நடிகர்கள் அரசியலில் களமிறங்கி வரும் சூழலில், நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வருவார் என்ற ஊகங்கள் அடிக்கடி எழுந்து வந்தன. ஆனால், தற்போது அவரது நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ விளக்கம், அந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போது சூர்யா தனது திரைப்படங்கள், அகரம் அறக்கட்டளை மூலம் கல்விச் சேவைகள் மற்றும் நற்பணி இயக்கத்தின் சமூகப் பணிகளிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக அவரது தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.சூர்யா
சூர்யா நற்பணி இயக்கம்
அரசியல் வருகை
நடிகர் சூர்யா
வதந்தி
அகரம் அறக்கட்டளை