“போலி சர்வேயை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதா? - மாணிக்கம் தாகூர் சொன்ன குட்டிக் கதை.. இப்போ ஏன்?

  • சென்னை: "ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல.. சில நேரங்களில் மக்கள் குரல் என்று காட்டப்படும் எண்கள் பிரிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதம்" என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். பிரதமர் வேட்பாளர் பட்டியலில் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் விஜய் இருந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குட்டிக்கதை ஒன்றைக் கூறியுள்ளார்.

    Advertisement

    இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் இணைந்து சமீபத்தில் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில் 2029ல் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தக் கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி 48.7%, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 27.1% மற்றும் முதலமைச்சர் விஜய் 9.2% வாக்குகளைப் பெற்று முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

    Advertisement

    பிரதமர் வேட்பாளர் விஜய்?

    தவெக அமைச்சர்களும், தவெகவினரும் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் எனும் ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வரும் சூழலில், பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் தெரிவித்து வருவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே 'இன்றைய முதலமைச்சர் விஜய், நாளைய பிரதமர்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், துாத்துக்குடி மாவட்ட தவெகவினரால் ஒட்டப்பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    மாணிக்கம் தாகூர் சொன்ன குட்டிக்கதை

    இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை ...
    நரியின் போலி கருத்துக்கணிப்பு

    ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
    காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள். ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு "கருத்துக்கணிப்பு" நடத்துவதாக அறிவித்தது.

    அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது: "கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது."

    Advertisement

    சிங்கம் அதை நம்பவில்லை.

    ஆனால் நரி தொடர்ந்து சொன்னது:

    "நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!"

    அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று,

    "இந்த சர்வேயைப் பார்த்தீர்களா?
    சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை" என்றது.

    யானையின் மனதில் சந்தேகம் வந்தது.

    சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது.

    சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர்.

    நரி மகிழ்ந்தது.

    ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும்.

    Advertisement

    ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது.

    அது கேட்டது:

    "இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?"

    நரி அமைதியாக இருந்தது.

    "எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?"

    மீண்டும் அமைதி.

    "யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன?
    முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?"

    நரியிடம் எந்தப் பதிலும் இல்லை.

    அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது:

    "இது கருத்துக்கணிப்பு அல்ல.
    கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை."

    சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    அவர்கள் புரிந்து கொண்டார்கள்:

    தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல.
    மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய்.

    Advertisement

    அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்:

    "எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்."

    நரி மட்டும் தனியாக நின்றது.

    போலி சர்வே

    நீதி:

    "ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது. ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல. சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்."

    போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல, அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான்." எனத் தெரிவித்துள்ளார்.

    அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம்

    முன்னதாக, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்.
    "2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தான். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தவெக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என பகிரங்கமாகத் தெரிவித்தார்.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் பேசி உள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தான் இதுதொடர்பாக குட்டிக்கதையைப் பகிர்ந்துள்ளார் மாணிக்கம் தாகூர்.

    English Summary

    “Not every survey reflects the voice of the people... sometimes, the figures presented as the people's voice are merely a weapon forged to cause division,” Manickam Tagore posted. Tamil Nadu Congress Committee President Manickam Tagore shared this anecdote at a time when Vijay was ranked right after Rahul Gandhi on a list of potential Prime Ministerial candidates.