தாம்பரம் - செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் போறீங்களா? அடியோடு மாறும் ரோடு.. நோட் பண்ணுங்க!

  • சென்னை: சென்னை நகரின் பிரதான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான தாம்பரம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

    Advertisement

    வாகன நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் ரூ.11.38 கோடி மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் 4 புதிய நடைமேம்பாலங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    விபத்து அபாய பகுதிகள் தேர்வு

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளைக் கடப்பது பாதசாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, அதிக விபத்துகள் நிகழும் பிளாக் ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 4 இடங்களில் இந்த புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

    ஊரப்பாக்கம் (சிவன் கோயில் அருகில்)
    கூடுவாஞ்சேரி (மின்வாரிய அலுவலகம் அருகில்)
    கூடுவாஞ்சேரி (ரயில் நிலையம் அருகில்)
    மறைமலை நகர் (ஃபோர்டு சந்திப்பு அருகில்)

    Advertisement

    கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே அமையவுள்ள நடைமேம்பாலம், தினசரி புறநகர் ரயில்களில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். மற்ற மூன்று இடங்களிலும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் எளிதாக சாலையைக் கடக்க இது வழிவகுக்கும்.

    லிப்ட் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகள்

    இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நடைமேம்பாலங்கள் வெறும் பாதசாரி பாலமாக மட்டுமல்லாமல், பல்வேறு பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ளன.

    முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில், நெடுஞ்சாலையின் இருபுறமும் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த ஒவ்வொரு லிப்டும் ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 16 பேர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது.

    Advertisement

    பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 4 நடைமேம்பாலங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் தேசிய நெடுஞ்சாலை-32 சுங்கச்சாவடியில் செயல்படும் அதிநவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்புடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொலைதூரக் கண்காணிப்பில் இருக்கும். இதனால் பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

    சூரிய மின்சக்தி மற்றும் சாலை பாதுகாப்பு அம்சங்கள்

    பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதை, அணுகுசாலைகள், படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் இயங்கும் பகுதிகள் முழுவதிலும் போதிய வெளிச்சம் தரும் வகையில் நவீன விளக்குகள் பொருத்தப்படும். இதற்குத் தேவையான மின்சாரத்தைப் பெறும் நோக்கில், நடைமேம்பாலங்கள் மற்றும் அதன் அணுகுப் பாதைகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட உள்ளன.

    Advertisement

    நெடுஞ்சாலையில் செல்லும் கனரக மற்றும் உயரமான வாகனங்கள் தடையின்றி செல்ல ஏதுவாக, சாலையின் தரைமட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 5.5 மீட்டர் உயரத்தில் இந்த பாலங்கள் கட்டப்படும். மேலும், பாதசாரிகள் பாலத்தை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், விபத்துகளைத் தவிர்க்கவும் பாதுகாப்பு தடுப்புகள், பிரதிபலிப்பான்கள், எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் பாலத்தைச் சுற்றிலும் நிறுவப்பட உள்ளன.

    முந்தைய திட்டங்களின் தொடர்ச்சி

    தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே பெருங்களத்தூர் (இரணியம்மன் கோயில் அருகில்), வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் (எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அருகில்), காட்டாங்கொளத்தூர் சந்திப்பு, மறைமலை நகர் டவுன்ஷிப் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேம்பாலங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

    Advertisement

    அந்த வரிசையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 4 புதிய மேம்பாலங்களின் பணிகள் நிறைவடையும் போது, தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, விபத்தில்லா பாதுகாப்பான சாலையாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tambaram-Chengalpattu NH-32 to Get 4 New Foot Overbridges With Lifts and CCTV