தங்க முட்டை போடும் வாத்து தாம்பரம் மாநகராட்சி! கொட்டிக்கிடக்கும் பல கோடி வருவாய் வாய்ப்புகள்

  • சென்னை: தாம்பரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய வணிகக் கட்டிடம் உருவாகிறது. வீடுகளில் கூடுதல் தளங்கள் கட்டப்படுவதும் அதிகரித்துள்ளது. மேலும், தாம்பரம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் வாகன நிறுத்துமிடங்களாக (Parking lots) மாற்றப்பட்டு வருகின்றன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை மாநகராட்சியின் வருவாய் ஆவணங்களில் இடம்பெறுவதே இல்லை. சென்னை புறநகர் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும், தாம்பரத்தின் வருவாய் வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், உள்ளாட்சி அமைப்பு தனது வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைச் சிறப்பாக விரிவுபடுத்தாததே ஆகும்.

    Advertisement

    வெளிப்புற விளம்பரம், சொத்து வரி மறுமதிப்பீடு, நிலுவைத் தொகை வசூல், தொழில் வரி மற்றும் முறைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றின் மூலம், தாம்பரம் மாநகராட்சியின் ஆண்டு வருவாயை 2026-27-ல் உள்ள சுமார் ₹1,447 கோடியிலிருந்து அடுத்த நிதியாண்டில் சுமார் ₹2,000 கோடியாக உயர்த்த முடியும் என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    ஆவணங்களில் அப்டேட் செய்யப்படாத சொத்துகள்

    'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்ட செய்திகளின்படி, தாம்பரம் மாநகராட்சி முன்பு 20.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகராட்சியாக இருந்தது. தற்போது ஐந்து மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகளை உள்ளடக்கி, சுமார் 85 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் தொகையையும் கொண்டு பரந்து விரிந்துள்ளது. அப்படியிருந்தும், சொத்து தொடர்பான ஆவணங்கள் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுப்பிக்கப்படவில்லை .

    2019-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, 2.3 லட்சம் சொத்துகள் மட்டுமே வரிக்கு உட்படுத்தப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குனர் டி.எஸ். சிவசாமி கூறுகையில், "கோவிட் காலத்திற்குப் பிறகு குறைந்தது 1.5 லட்சம் கூடுதல் கட்டிடங்கள் வந்துள்ளன. ஆனால், கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன் மிகச் சிலரே மாற்றங்களைப் பதிவு செய்து உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்புதல் பெறுகின்றனர். உள்ளூர் அளவிலான கண்காணிப்பும் பலவீனமடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கட்டிடங்களைக் கண்காணிக்க மாநகராட்சிகளால் ஒரு பதிவேடு பராமரிக்கப்பட்டது; ஆனால் இப்போது அத்தகைய பதிவேடு எதுவும் இல்லை," என்றார்.

    Advertisement

    ₹200 கோடி வரி நிலுவை & சொத்து வரி வாய்ப்புகள்

    சொத்து வரிதான் கூடுதல் வருவாய்க்கான மிகப்பெரிய ஆதாரமாக அமையக்கூடும் என்று தாம்பரம் மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரிக்கு உட்படுத்தப்பட்ட சொத்துகளில், 42.4% உரிமையாளர்கள் மட்டுமே தங்களது வரியை முழுமையாகச் செலுத்துகிறார்கள். உள்ளாட்சி அமைப்பிடம் ₹200 கோடி வரையிலான பெரிய அளவிலான வரி நிலுவைத் தொகையும் உள்ளது. ஆண்டுதோறும் வரி செலுத்துவோரின் விகிதம் 2023-24-ல் 56%-லிருந்து 2025-26-ல் 58.2%-ஆக அதிகரித்துள்ளது.

    புதிய மதிப்பீட்டின் மூலம் வரிக்கு உட்படுத்தப்படும் சொத்துகளின் எண்ணிக்கையைச் சுமார் நான்கு லட்சமாக உயர்த்த முடியும் என்றும், இதன் மூலம் கூடுதலாக ₹100 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனிடையே, "சமீபத்தில் சில பகுதிகளில் முன் அறிவிப்பு ஏதுமின்றி சொத்து வரி ஆண்டுக்கு ₹414-லிருந்து ₹4,760-ஆக உயர்த்தப்பட்டது. ஒரு சொத்தின் மதிப்பு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வரியை திடீரென எப்படி மாற்றியமைக்க முடியும்? முறையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றுவதற்குப் பதிலாக, வரி செலுத்தாதவர்களிடமிருந்து வரியை வசூலிக்க வேண்டும்" என்று தாம்பரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    பயன்படுத்தப்படாத விளம்பர வருவாய்

    வெளிப்புற விளம்பரங்கள் என்பது பெரிதும் பயன்படுத்தப்படாத மற்றொரு வருவாய் மூலமாகும். தாம்பரத்தில் 84 அங்கீகரிக்கப்பட்ட விளம்பர இடங்கள் மட்டுமே உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ₹1.26 கோடி வருவாய் கிடைக்கிறது. இப்பகுதியில் சுமார் 580 சாலைகளும் 51 பேருந்து நிழற்குடைகளும் உள்ளன. முக்கியச் சாலைப் பகுதிகளில் குறைந்தது 100 அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகள் செயல்பட்டு வருகின்றன.

    மாதாந்திர விளம்பரக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ₹4,500 ஆகும்; 30 சதுர மீட்டர் கொண்ட ஒரு விளம்பரப் பலகை மூலம் மாதத்திற்கு குறைந்தது ₹1.35 லட்சம் வருவாய் கிடைக்கும். விளம்பரப் பலகைகள், பேருந்து நிழற்குடைகள், சாலைத் தடுப்புப் பகுதிகள் மற்றும் பிற இடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பர வருவாயை ஆண்டுக்கு ₹50 கோடியாக அதிகரிக்க முடியும்.

    Advertisement

    வாகன நிறுத்துமிடம் & தொழில் வரி

    ரேடியல் சாலை மற்றும் மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், காலி இடங்களை வாகன நிறுத்துமிடங்களாக மாற்றியுள்ளன. இப்பகுதி வழியாகத் தினமும் குறைந்தது ஒரு லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன நிறுத்துமிட வளாகத்துடன் கூடிய முறையான கொள்கையை அமல்படுத்தினால், ஆண்டுக்கு ₹84 கோடி வரை வருவாய் ஈட்ட தாம்பரம் மாநகராட்சியால் முடியும்.

    தொழில் வரியும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, சம்பளம் பெறும் 1,22,384 தொழில் வல்லுநர்கள் மூலம் சுமார் ₹40 கோடி வரி கிடைக்கிறது. காலி நில வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம், பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) மற்றும் வரி அல்லாத பிற வருவாய்கள் மூலம் மாநகராட்சிக்கு இப்போது சுமார் ₹85 கோடி கிடைக்கிறது. முறையான மதிப்பீடு மற்றும் வசூல் மூலம் இந்த வருவாயை ₹156 கோடியாக உயர்த்த முடியும்.

    Advertisement

    மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கை

    இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர். சரண்யா கூறுகையில், "வருவாய் வசூலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். வரி செலுத்தாதவர்களுக்கு நாங்கள் அறிவிப்புகளை அனுப்பியுள்ளோம்; மேலும் அவர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த இந்த மாத இறுதி வரை அவகாசம் அளித்துள்ளோம். சில பகுதிகளில் வரி உயர்த்தப்பட்ட விவகாரத்திற்குத் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    English Summary

    Goldmine for Revenue : A commercial building comes up in Tambaram almost every month, and the construction of additional floors on residential buildings is on the rise; furthermore, due to traffic congestion on Tambaram Road, every available vacant plot is being converted into a parking space.