சென்னை: வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு மர்மகும்பல் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி சமூக வலைதளத்தில் வெளியான இந்த செய்தியை தவறானது என்றும், பதிவை நீக்குமாறும் முதலில் பதிவிட்ட போலீஸார், அந்தப் பதிவை சிறுது நேரத்திலேயே நீக்கினர். இதைத்தொடர்ந்து, தற்போது சம்பவத்தை உறுதிப்படுத்தும் ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். போலீஸாரின் இந்த அடுத்தடுத்த விளக்கங்கள் சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மர்மகும்பல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவியை மயக்கமடைய செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி கழிவறையில் மயக்க நிலையில் இருந்த மாணவியின் உடலை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு பாதிக்கப்பட்ட மாணவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பான செய்தி தனியார் தொலைக்காட்சி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், இந்த செய்தி தவறானது என்றும், இந்தப் பதிவை டெலிட் செய்யுமாறும் போலீஸார் தெரிவித்து போஸ்ட் போட்டிருந்தனர். பின்னர், சற்று நேரத்திலேயே அந்த போஸ்ட் டெலிட் செய்யப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, மாணவிக்கு மர்ம கும்பல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என தாம்பரம் போலீஸ் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டது. முதலில் செய்தி போலியானது எனக் கூறிய போலீஸார், அந்த பதிவை நீக்கிய நிலையில் தற்போது உரிய ஆதாரம் இல்லை, விசாரணை நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதலில் சம்பவம் தொடர்பான செய்தியை தவறானது எனக் கூறி பதிவிடப்பட்டிருந்தால், அந்தப் பதிவு பின்னர் ஏன் நீக்கப்பட்டது?, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், ஆரம்பத்திலேயே சம்பவம் குறித்து உறுதியான முடிவுக்கு வருவதற்கான காரணம் என்ன?, தற்போது ஆதாரம் இல்லை, விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என விளக்கம் அளிக்கப்படுவதன் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாம்பரம் போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 24.09.2026 அன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தாம்பரம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.எந்த ஆதாரமும் இல்லை
வெளுக்கும் நெட்டிசன்கள்
போலீஸ் விளக்கம்
ஆதாரம் கிடைக்கவில்லை