சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் தினமும் பயணம் செய்பவர்களுக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் முக்கியமானது. வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 2 புதிய மின் தூக்கிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால் என்னென்ன வசதிகள் கிடைக்கப் போகின்றன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்...!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முக்கியமாக, ஒரு பிளாட்பார்மிலிருந்து இன்னொரு பிளாட்பார்முக்கு செல்வதற்கு பயணிகள் நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்கவும், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 மீட்டர் அகல நடைமேம்பாலத்துடன் இணைக்கப்பட்ட 2 மின் தூக்கிகள் அதாவது லிப்ட்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஒரு மின் தூக்கி 1 மற்றும் 2-வது நடைமேடைகளுக்கும், மற்றொரு மின் தூக்கி 3 மற்றும் 4-வது நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஒவ்வொரு முறையும் படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டிய அவசியம் குறையும். குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வருபவர்கள், பெண்கள் மற்றும் அதிகமான பைகளை எடுத்துச் செல்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். மின் தூக்கிகள் மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ரயில் நிலையத்தின் மற்ற நடைமேடைகளுக்குச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு இடங்களில் சக்கர நாற்காலிகளும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பயணிகளின் உடைமைகளை எடுத்துச் செல்ல உதவும் சுமை தூக்கும் பணியாளர்களின் விவரங்கள், அவர்களுக்கான கட்டணங்கள் மற்றும் தொடர்பு எண்கள் ஆகியவையும் ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி தேவைப்படுபவர்கள் நிலைய மேலாளர் அல்லது நிலையப் பொறுப்பாளரை அணுகலாம். மாற்றுத்திறனாளி பயணிகள் சக்கர நாற்காலி வசதி மற்றும் ரயிலில் ஏறுவதற்கான உதவிகளைப் பெறுவதற்கும் தனியாக தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவசமாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய நடைமேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் வரை இந்த உதவி தற்காலிகமாக வழங்கப்படும். இப்போது 2 மின் தூக்கிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 9 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. அதாவது, இன்னும் 7 மின் தூக்கிகளின் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை 2026 டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக முடிக்க ரயில்வே நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மின் தூக்கிகளுடன் சேர்த்து, பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்வதை எளிதாக்க 10 புதிய நகரும் படிக்கட்டுகள் அதாவது எஸ்கலேட்டர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் தொகுதி எஸ்கலேட்டர்களை 2026 நவம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்போது புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களின் சேவைகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மொத்தத்தில், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தும் பயணிகளுக்கு இனிமேல் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் சிரமம் குறையப்போகிறது.. அத்துடன் பிளாட்பார்ம்களுக்கு செல்வதும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தாம்பரம் ரயில் நிலையம்
லிப்ட் வசதிகள்
வீல் சேர் வசதியும் இருக்கு
அடுத்து 7 லிப்ட்கள்