சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்காக சேலையூரில் வீடு ஒன்றில் அடைக்கப்பட்ட போது தம்பதிகளுக்கு என்ன நடந்தது. அவர்களால் சென்னை சேலையூர் போலீசாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கைதான இருவரையும் முறையாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கவேண்டும். அதன்பிறகு இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து, நகையை மீட்க நடவடிக்கை எடுக்காமல், போலீசார் எடுத்த முடிவு பெரிய சிக்கலாக முடிந்துள்ளது.
தஞ்சாவூ மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த 60 வயதாகும் பன்னீர்செல்வம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. இவரது மனைவி விஜயாவுக்கு 55 வயது ஆகிறது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த அனந்தபத்மநாபன் என்பவர் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அனந்தபத்மநாபன் மூலம் விஜயா கடந்த டிசம்பர் மாதம் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் வசிக்கும் சரோஜா என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். விஜயா வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே, தான் வேலை பார்த்த சரோஜா வீட்டில் 35 பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த திருட்டில் அவரது கணவர் பன்னீர்செல்வத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சேலையூர் போலீசார் இந்த திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜயாவையும், பன்னீர்செல்வத்தையும் தேடிவந்தனர். கடந்த வாரம் மேல்மருவத்தூரில் வைத்து விஜயாவையும், பன்னீர்செல்வத்தையும் சேலையூர் போலீசார் கைது செய்தனர். திருடிய 35 பவுன் நகைகளையும், விஜயா ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்ததாக சொல்லியிருக்கிறார்.. மறைத்து வைத்த இடத்தை காட்டுகிறேன் என்று சொன்னதன்பேரில், சேலையூர் போலீசார் நகையை மீட்பதற்காக விஜயாவையும், பன்னீர்செல்வத்தையும் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பவில்லை. அதற்கு பதிலாக, விஜயாவை வேலைக்கு சேர்த்துவிட்ட மேற்கு மாம்பலத்தில் உள்ள அனந்தபத்மநாபனின் வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று முன்தினம் இரவு அடைத்து வைத்துள்ளார்கள். இரவில் பன்னீர்செல்வத்திற்கும், விஜயாவிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளனது. அப்போது இருவரும் கைகலப்பில் இறங்கியுள்ளனர். ஒருவரையொருவர் தாக்கியிருக்கிறார்கள். சண்டையின் உச்சக்கட்டத்தில் அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்து விஜயா, கணவர் பன்னீர்செல்வத்தை சரமாரியாக குத்திவிட்டாராம். இதனால் பதிலுக்கு கத்தியை பிடுங்கி பன்னீர்செல்வம், விஜயாவை சரமாரியாக குத்தினாராம். ஒருகட்டத்தில் இருவரும் கத்தி குத்து காயத்துடன் தரையில் சாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்கள். நேற்று காலையில், அனந்தபத்மநாபன் அவர்கள் தங்கியிருந்த அறையை திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். பன்னீர்செல்வமும், விஜயாவும் மயங்கி கிடந்தார்கள். சேலையூர் போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடம் அசோக் நகர் போலீஸ் எல்லையில் உள்ளதால், அசோக் நகர் போலீசாரும் வந்து விசாரித்துள்ளார்கள். பன்னீர்செல்வம் கத்தியால் குத்தியதில், விஜயா பரிதாபமாக இறந்துபோனார். பன்னீர்செல்வம் உயிருக்கு போராடினார். அவரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நகை திருட்டு வழக்கில் சிக்கிய விஜயா, கொலை செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் அரசு ஆஸ்பத்திரியில் காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பன்னீர்செல்வம் மீது அசோக் நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பன்னீர்செல்வம் உடல் நலம் தேறி வந்தால், அவர் மனைவியை கொன்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார். இதனிடையே நகை திருட்டு வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் சிக்கலில் சிக்கியுள்ளனர். கைதான இருவரையும் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கவேண்டும். அதன்பிறகு இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து, நகையை மீட்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அதை செய்யாத போலீசார் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.