கட்டிய சிலைக்கு மீண்டும் டெண்டர்! தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை பாயும்! விஜய் அரசு எச்சரிக்கை

  • சென்னை: தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் விவகாரம் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வேறு சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனராம். இந்த விவகாரத்தில் தவறு செய்த தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

    Advertisement

    சென்னை புறநகரான தாம்பரம் மாநகராட்சியில் அசோக சின்ன சிலை கட்டி முடிக்கப்பட்டு, சமீபத்தில் அமைச்சர் சரத்குமாரால் திறக்கப்பட்டது. இருப்பினும், அந்த சிலைக்கு ஒரு மாதம் கழித்து மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை முதலில் அறப்போர் இயக்கம் எழுப்பியிருந்தது.

    Advertisement

    என்ன புகார்

    அதில் டெண்டரில் 45 லட்சம் ரூபாய் வரை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரனும் அதிகாரிகளும் ஊழல் செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இப்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள தமிழக அரசு, செயல்முறை குறைபாடுகளுக்காக மாநகராட்சி மண்டல் உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தாம்பரம் மாநாகரா ஆணையரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தாம்பரம் டெண்டர் முறைகேடு பற்றி விசாரிக்க நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு விளக்கம்

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிகழ்வில் அறப்போர் இயக்கத்தினால் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களால் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தாம்பரம் மாநகராட்சியில் மண்டலம் 4-க்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் ரூ.18.60 இலட்சம் மதிப்பீட்டில் நீர் சேமிப்பு சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்தல் பணி மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4-க்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் ரூ.27.30 இலட்சம் மதிப்பீட்டில் அசோகத் தூண் சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்துதல் பணி ஆகிய பணிகளுக்கு பொதுநிதி அல்லது CSR மூலம் செயல்படுத்தலாம் என 14.07.2026 அன்று மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    Advertisement

    செயல்முறை குறைபாடு

    அதனைத் தொடர்ந்து 23.07.2026 அன்று மாநகராட்சி ஆணையரால் மேற்படி பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 24.07.2026 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்படி 2 பணிகளையும் செயல்படுத்தித் தருவதாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தால் மேற்கண்ட 2 பணிகளும் முடிக்கப்பட்ட போதிலும் 06.08.2026 அன்று ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வு செயல்முறை குறைபாடு என கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் பணியாணை ஏதும் வழங்கப்படவில்லை, மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து செலவினம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

    கடும் நடவடிக்கை

    இருப்பினும், செயல்முறை குறைபாடுகளுக்காக தாம்பரம் மாநகராட்சியின் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி ஆணையர், பணியிலிருந்து அரசால் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்நிகழ்வு தொடர்பான விரிவான விசாரணை நடத்துமாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த அனைத்து நபர்கள் மீதும் எவ்வித விடுபாடுமின்றி உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu government has ordered a detailed inquiry into alleged procedural irregularities in Tambaram Corporation projects(தாம்பரம் டெண்டர் முறைகேடு தமிழக அரசு விளக்கம்): Tambaram Tender issue latest news in tamil.