சென்னை: தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு நகரம் அதாவது AI City அமைப்பதற்கான நிலத்தைத் தேர்வு செய்யும் பணிகளை மாநில அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
இதற்கான முக்கிய அறிவிப்பை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் ஆர். குமார் வியாழக்கிழமை வெளியிட்டார். இதற்கான பணிகளை விரைவாக முடிக்கும்படி முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (FICCI) சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 10-வது 'டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் அண்ட் டிரான்ஸ்ஃபார்மேஷன்' மாநாட்டை அமைச்சர் ஆர். குமார் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அமையவுள்ள பிரம்மாண்டமான ஏஐ சிட்டிக்கான இடம், அல்லது அதன் ஒரு முக்கிய பகுதி தலைநகர் சென்னைக்கு அருகிலேயே அமையும்" என்று தெரிவித்தார். இந்தியாவில் கல்வி பயிலும் திறமைமிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இங்கு போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இந்த சூழலை மாற்றுவதே அரசின் முதன்மை நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் பேசுகையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நமது இளைஞர்களைத் தக்கவைக்கவும், பிற நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை ஈர்க்கும் வகையிலும் சர்வதேச தரம் வாய்ந்த சூழலியலை உருவாக்க வேண்டும் என்றார். குழந்தைகள் காப்பகத்தில் தொடங்கி பல்கலைக்கழக அளவிலான உயர்கல்வி வரை சர்வதேச தரத்திலான கல்வி வசதிகள், கோல்ஃப் மற்றும் கடல்சார் விளையாட்டு போன்ற விளையாட்டு அமைப்புகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் சொகுசு வசதிகள் இடம்பெறும். இந்த செயற்கை நுண்ணறிவு நகரத்தில் முன்னணி ஏஐ ஆராய்ச்சி மையங்கள், Centres of Excellence மையங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள்ஆகியவை அமைக்கப்படும். அத்துடன், மாநிலத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களை மேம்படுத்தி, இந்த தொழில்நுட்பக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மட்டுமே தொழிற்துறையில் சிறந்து விளங்குவதாகவும், குறைந்தபட்சம் 16 மாவட்டங்களை அந்த உயர் நிலைக்கு உயர்த்துவதே அரசின் இலக்கு என்றும் அமைச்சர் கூறினார். மேலும், பள்ளிக் கல்வியின் முதல் வகுப்பிலிருந்தே ஏஐ சார்ந்த பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ் மொழிக்கான Large Language Models - LLMs களை உருவாக்குவது குறித்துப் பேசினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு இதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி தேவை. இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.வெளிநாடு செல்வதை தடுக்க உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு
இதற்காக உருவாக உள்ள ஏஐ சிட்டியில்:
முதல் வகுப்பிலிருந்தே ஏஐ சார்ந்த பாடத்திட்டங்கள்
ஏஐ சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகம்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்