சென்னை: புதிய திரைப்படங்களுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் பிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.