தமிழக சட்டசபை 4 நாட்களுக்கு ஒத்திவைப்பு.. சபாநாயகர் அறிவிப்பு!

  • சென்னை: தமிழக சட்டசபை 4 நாட்களுக்கு வரும் ஆகஸ்ட் 17 வரை ஒத்திவைக்கப்படுகிறது எனவும், ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு பிறகு வினாக்கள், விடைகள் நேரம் ஒதுக்கப்படும் எனவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 முதல் நடைபெற்று வருகிறது. 5 ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று 4ஆம் நாளாக நடைபெற்றது.

    Advertisement

    கடந்த 3 நாட்களில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு தொடர்பான தீர்மானம், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம், நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா-2026ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தனித் தீர்மானம் என பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    இன்று சட்டப்பேரவையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படாத நிலையில் ஆதாரமில்லாமல், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் விளக்கம் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து, நிதி அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலுரை வாசித்தார். "நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கும், சீர்திருத்தங்களுக்கும், பொதுநல நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்டை சமநிலைப்படுத்தியுள்ளோம்.

    திருத்த வரவு-செலவுத் திட்டம் பற்றிய விவாதத்தில் பங்கேற்ற இந்த சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மத்திய அரசால் வழங்கப்படும் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கு நியாயமான பங்கு கோரும் தீர்மானத்திற்கு முழுமனதோடு ஆதரவளித்த இந்த சபைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். அதைத்தொடர்ந்து, பட்ஜெட் பதிலுரையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார்.

    Advertisement

    அதன்பிறகு, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையை துறை அமைச்சர் வினோத் வாசித்தார். "வரலாற்றில் இல்லாத அளவிற்கு நெல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பின் விலையும் விவசாயிகளுக்காக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வில் பாலையும், தேனையும் அளித்துள்ளார் முதலமைச்சர்." எனப் பேசினார்.

    வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரை வாசித்த அமைச்சர் வினோத், கடைசியாக சூரியனால் அனைவருக்கும் வியர்த்தது, நீங்கள் வந்தபிறகு சூரியனுக்கு வியர்த்தது என முதலமைச்சரிடம் தெரிவித்தார். உடனே அவையில் சலசலப்பு எழுந்தது.

    வேளாண் அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலளித்த ஓபிஎஸ், "இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார். எத்தனையோ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தும் சூரியன் மீது ஏவுகணையை ஏவ முடியவில்லை" என்றார்.

    Advertisement

    இதையடுத்து பேரவை நடவடிக்கை முடிவடைந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை 4 நாட்களுக்கு வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) வரை ஒத்திவைக்கப்படுகிறது எனவும், ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு பிறகு வினாக்கள், விடைகள் நேரம் ஒதுக்கப்படும் எனவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

    English Summary

    Speaker JCD Prabhakar has announced that the Tamil Nadu Assembly is adjourned for four days until August 17, and that time for questions and answers will be allocated after August 20.