15 லாம் இல்லைங்க! டைப்பிங் மிஸ்டேக்! சாரி.. தங்கம் தென்னரசிடம் மன்னிப்பு கேட்ட தாரகை கத்பெர்ட்

  • சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மன்னிப்பு கேட்டார்.

    Advertisement

    இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. முன்னதாக ஆளுநர் அர்லேகரை சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும், சட்டசபை செயலாளர் சாந்தியும் பூங்கொத்து கொடுத்து அழைத்து வந்தனர்.

    Advertisement

    அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த அவை தொடங்கியது. அடுத்தது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார். 3 ஆண்டுகளாக தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கேட்டு அது நடக்காததால் உரையை வாசிக்காமல் சென்றுவிடுவது வழக்கம்.

    இந்த முறை பொறுப்பு ஆளுநராக இருக்கும் அர்லேகர் தமிழக அரசின் உரையை அச்சு பிசகாமல் வாசித்தார். அந்த உரையில் இருந்த அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருந்தார். பெயர்கள் உச்சரிப்பில் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

    Advertisement

    இதையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதம் 19-ம் தேதி (இன்று) தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும். நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை. இது குறுகிய கால கூட்டத் தொடர் என்பதால் கேள்வி அனுப்பி, சார்ந்த துறையில் இருந்து பதில் பெற்றுத் தருவதில் காலதாமதம் ஆகும். எனவே வினா விடை நேரம் இந்த தொடரில் இருக்காது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து இன்றைய தினம் அவை தொடங்கியது. அப்போது இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது உரையாற்றிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தாரகை கத்பெர்ட், வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 15 டிரில்லியன் டாலரை எட்டும் என்று குறிப்பிட்டார்.

    இவ்வளவு பெரிய இலக்கு பேசப்பட்டதைத் தொடர்ந்து, அவையிலிருந்த திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உடனடியாக எழுந்து, "15 டிரில்லியனா, இது எப்படி சாத்தியம்? இது குறித்து அரசின் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பெர்ட், "உண்மையில் அது 1.5 டிரில்லியன் டாலர்தான், டைப் செய்யும் போது தவறு நடந்துள்ளது; மன்னிக்கவும்" என்று அவையில் விளக்கம் அளித்துத் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

    Advertisement

    தட்டச்சுப் பிழையினால் 1.5 டிரில்லியன் என்பது 15 டிரில்லியன் என மாறியதாக அவர் அளித்த விளக்கம் சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியமான விவாதமாக மாறியுள்ளது.

    English Summary

    During the discussion on the motion thanking the Governor in the Tamil Nadu Assembly, Congress MLA Tharakai Cuthbert apologised to former minister Thangam Thennarasu after interrupting him, drawing attention during the Assembly proceedings.