முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. 2வது தேசிய கீதத்துடன் தொடங்கியது தமிழக சட்டமன்ற கூட்டம்!

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 17-ஆவது கூட்டத்தொடர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2வத தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற கூட்டம் தொடங்கியுள்ளது.

    Advertisement

    கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முழுமையான கூட்டத்தொடர் இதுவாகும்.

    Advertisement

    இன்று தொடங்கும் கூட்டத்தில், ஆளுநர் ஆர்லேகர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதன் தமிழாக்கத்தை வாசித்தார். இந்த உரையில் தவெக அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல ஆளுநர் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட அலுவல் ஆய்வுக் குழு கூடும். இக்கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இத்தொடர் சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

    Advertisement

    பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். கூட்டத்தொடரின் இறுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்குவார்.

    முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவிய மோதல் போக்குகள் தற்போது இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரிசை குறித்த சமீபத்திய சர்ச்சைகள் பேரவையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அப்படியான சர்ச்சைகள் எதுவும் எழவில்லை.

    இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.

    English Summary

    Tamil Nadu Assembly: The 17th session of the Tamil Nadu Legislative Assembly begins today at 10:00 AM with an address by Governor Rajendra Vishwanath Arlekar. This is the first full-fledged session to be held since the government led by Chief Minister Joseph Vijay—representing the Tamizhaga Vettri Kazhagam (TVK)—assumed office following the Assembly elections held last May.