சென்னை: செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதம் நாளை மறுநாள் முதல் நடைபெறும் என்றும், செப்டம்பர் 7 ஆம் தேதி காவல்துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசுகிறார் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிராபகர் தலைமையில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் திமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், எவ வேலு மேலும், அதிமுக சார்பில் ஓ எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், பாமக சார்பில் சௌமியா அன்புமணி ஆகியோருடன் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டம் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும். நாளை மறுநாள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். ஆகஸ்ட் 8, 9 விடுமுறை. ஆகஸ்ட் 10, 11ல் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரையும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரையும் பேரவையை நடத்த விவாதித்துள்ளோம். தேவைப்பட்டால் மாலை நேரத்தில் சட்டப்பேரவை நடக்கலாம். செப்டம்பர் 7 ஆம் தேதி காவல்துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசுகிறார். சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பயமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக சட்டமன்ற குழு தலைவர்" எனத் தெரிவித்துள்ளார்.