எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் வழங்கிய 1.44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம்- கு.ப. கிருஷ்ணன் தகவல்

  • திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 1.44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன், திருச்சி வயலூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 44 ஆயிரத்து 308 மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.

    Advertisement

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் வீடு இல்லாதவர்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையை செலுத்திய பயனாளிகளுக்கு தற்போது கிரையப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 52 ஆயிரத்து 968 மனைகளுக்கும், 9 மாவட்டங்களில் 17 ஆயிரத்து 569 மனைகளுக்கும் கிரையப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் பயனாளிகள் தங்களது வாழ்விடத்திற்கான உரிமையைப் பெற்று, வீடுகள் கட்டுவதற்கான சட்டப்பூர்வ உரிமைகளையும் பெற முடியும்.

    திருச்சி மாநகரில் 4,201 பேருக்கு கிரையப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, பயனாளிகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை விரைவாக செலுத்தி கிரையப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    சில பகுதிகளில் ஜாதிப் பெயர்களில் தெருக்கள் உள்ளன. அந்தக் காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் இத்தகைய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜாதியின் பெயரில் தெருக்கள் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, அவை நீக்கப்பட்டு புதிய பெயர்கள் சூட்டப்படும்.

    கிரையப் பத்திரம் வழங்குவது தொடர்பாக தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. முதன்முதலில் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று யாரிடம் உள்ளது, அவரிடமிருந்து யார் கிரயம் பெற்றுள்ளார், பின்னர் யார் வாங்கியுள்ளார் என அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்படும்.

    அதன் அடிப்படையில் அரசு விலையை நிர்ணயம் செய்து, அந்த விலைக்கு கிரையப் பத்திரங்கள் வழங்கப்படும். ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் சிதிலமடைந்திருந்தால், அவை 10 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கப்படும்.

    Advertisement

    20 ஆண்டுகள் கடந்த குடியிருப்புகள் என்றால், அவற்றை இடித்துவிட்டு, அங்கு வசித்து வந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுத்து மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டும்.

    திருச்சி பழைய மத்திய பேருந்து நிலையம் தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. அதேபோல், புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையமும் எதிர்பார்த்த அளவில் சரியாக இயங்கவில்லை. இவை குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. அதற்கு வாடகை செலுத்திக் கொண்டு எவ்வளவு காலம் செயல்பட முடியும்? தமிழகத்தின் தலைநகர் திருச்சியில் அமைய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்திருந்தார். அப்போது அதற்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டன.

    Advertisement

    அதேபோல், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டபோது, மு.க. ஸ்டாலின் சுவர் ஏறிக் குதித்து போராட்டம் நடத்திய வரலாறும் உள்ளது.

    தலைமைச் செயலகம் அமைப்பது அவசியமானது. அதற்காக எதிர்ப்பு தெரிவிப்பதை மட்டுமே செய்து கொண்டிருக்காமல், நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். முதலமைச்சர் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, மக்களுக்கும் ஏற்ற வகையில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வார்.

    அண்ணா வலியுறுத்திய கொள்கைகள் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்பதாகும். ஆனால், திமுகவினர் போராட்டம் என்ற பெயரில் கண்ணியமற்ற வகையில் பேசியுள்ளனர். மிசா குறித்து பேசும்போது கொதித்தெழும் திமுகவினர், அதனை வரலாறு என்கின்றனர். ஆனால், அவசரநிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த 20 அம்சத் திட்டத்தை விமர்சிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசப்பட்டது.

    Advertisement

    இந்திரா காந்தி நாட்டிற்காக 64 துப்பாக்கிக் குண்டுகளை தாங்கியவர். அத்தகைய தலைவரை அவமதிக்கும் வகையில் திமுகவினர் பேசியுள்ளனர். இதுபோன்ற செயல்களில் இருந்து திமுக இன்னும் திருந்தவில்லை. அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

    திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் கோரிக்கையை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன்.

    முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து அவதூறாகப் பேசுபவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. முதலமைச்சர் லண்டன் சென்றுள்ளார். அங்கு நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இன்றும், நாளையும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். இந்த ஆட்சியின் ஐந்தாண்டு கால நிறைவில் எத்தனை திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பதைப் பார்த்துத்தான் மதிப்பிட வேண்டும். இப்போதே அதுகுறித்து கேள்வி எழுப்புவது சரியல்ல.

    இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது அவர்களின் விருப்பம். பொறுத்திருந்து பாருங்கள். லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் திரும்பி வந்து நல்ல விஷயங்களைப் பேசுவார். நல்ல முடிவுகள் எடுக்கப்படும். அனைத்தும் நல்லபடியாக முடியும். தவெகாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக்கனி போன்றது. எனவே, நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    English Summary

    Tamil nadu Urban Habitat Development Board Chairman K.P.Krishnan says that the state has begun distributing Kiraya pathiram for 1.44 lakhs plot across the state.