சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் நமது முதல்வர் விஜய் ஆடம்பரத்தில் எப்படி புரள்கிறார் பாருங்கள் என ஒரு வீடியோ மூலம் தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்ளில் 244 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் என வந்துள்ளது.
சென்னையில் மட்டும் 156 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ளது. அதில் 87 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் எனும் கொசுவால் ஏற்படுகிறது. இது தேங்கிய நீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். எனவே வீட்டை சுற்றி குப்பை, தண்ணீர் தேங்க வழியில்லாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அச்சப்படும்படியாக இல்லை என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தாலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்கு வரும் மக்களில் டெங்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. அது போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு பாதித்த மாணவன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்படி இருக்கும் போது டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கையை எடுக்காமல் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதிலும், வெளிநாட்டுக்கு டூர் செல்வதிலுமே குறியாக இருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக, டெங்கு வைரஸ் குறித்த செய்தி தொகுப்புடன் அவர் லண்டனில் ஜிப்பர் ஓட்டும் வீடியோவையும் இணைத்து, புதிய தலைமைச் செயலகம் குறித்து விஜய் அறிவித்த வீடியோவையும் சேர்த்து விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் இருக்க, நமது ரீல்ஸ் முதல்வர் விஜய்யோ ஆடம்பரத்தில் புரள்கிறார்! என கேப்ஷனையும் கொடுத்துள்ளது.