மின் கட்டண குளறுபடி.. “வசூல் செய்த கூடுதல் பணத்தை திருப்பி கொடுங்க”.. தவெக அரசுக்கு நயினார் கோரிக்கை

  • சென்னை: தமிழக மக்களை பாதிக்கும் மின் கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தப் பிரச்சனைகளை உடனடியாகச் சீரமைக்காவிட்டால், பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். முந்தைய மாதங்களை விட 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் வந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 300 ரூபாய் வந்த மின் கட்டணம் இந்த மாதம் 800 ரூபாய்க்கு மேல் வந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதிலும் 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என அறிவித்த போதும் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளதாக நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களுக்கு நேர்மையான மற்றும் துல்லியமான சேவைகளை வழங்க வேண்டிய தவெக அரசின் மின்சார வாரியம், தனது பொறுப்பில் இருந்து தவறியதன் காரணமாக, மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்குத் தவறான கட்டணங்களை அனுப்பியுள்ளது. இத்தகைய தவறான பில்லிங் முறைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

    Advertisement

    மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது முதல்வர் விஜய் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது. எனவே கணக்கீட்டுப் பிழைகளால் மக்கள் மீது இமாலயக் கட்டணம் சுமத்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில், முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    மேலும், தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாகத் திருப்பித் தருவதோடு, மின் கட்டணக் குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணச் சிறப்புத் தணிக்கையை தவெக அரசு தொடங்க வேண்டும். மின் வாரியத்தின் இந்தப் பிரச்சனைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu BJP President Nainar Nagendran has stated that an immediate solution must be found for the electricity tariff irregularities affecting the people of the state, and warned that the BJP would launch massive protests if these issues are not rectified immediately.