ஐந்தே மாதம்.. 30,021 கோடி கடன்! வட்டி மட்டும் 25000 கோடி! தமிழக அரசின் வரவு - செலவு கணக்கு இது தான்!

  • சென்னை: தமிழக அரசின் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான வருவாய், செலவு மற்றும் கடன் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த 5 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.20,349 கோடியாக உள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் தமிழக அரசு ரூ.30,021 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அதே நேரத்தில், வரி மற்றும் வரியல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    மாநில அரசுக்கு மாநில ஜிஎஸ்டி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரிப் பங்கு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வருவாய் கிடைக்கிறது. மேலும், சேவைக் கட்டணங்கள், அபராதங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக வரியல்லாத வருவாயும் கிடைக்கிறது.

    வரவு செலவு

    ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான வருவாய், செலவு மற்றும் கடன் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் வரி வருவாய், வரியல்லாத வருவாய் மற்றும் மத்திய அரசின் மானியங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் தமிழக அரசுக்கு மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் செலவு

    அரசின் வருவாய் ஒருபுறம் இருந்தாலும், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், அரசு திட்டங்கள், இலவசத் திட்டங்கள், மானியங்கள், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக அரசு தொடர்ந்து செலவு செய்து வருகிறது. இதனால், கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் மொத்த செலவு 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், அரசுக்கு கிடைத்த 1,17,791 கோடி ருபாய் வருமானத்தை விட செலவு அதிகம். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 20,349 கோடி ஆகும்.

    ரூ.30021 கோடி கடன்

    வருவாய் பற்றாக்குறையை விட தமிழக அரசு கடனும் அதிகமாக வாங்கி இருக்கிறது. தமிழக அரசின் கடன்களில் வட்டி செலுத்துவதற்கு என்றே பெரிய அளவில் பங்கு வைக்கிறது. அந்த வகையில் கடந்த ஐந்து மாதங்களில் அரசு செலுத்திய வட்டி மட்டும் 25 ஆயிரத்து 991 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துக்காக 21 ஆயிரத்து 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாதங்களில் தமிழக அரசு 30 ஆயிரத்து 21 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது.

    Advertisement

    தமிழக அரசின் வருவாய்

    இது மட்டும் அல்லாமல் தமிழக அரசுக்கு எந்தெந்த வழிகளில் வருவாய் கிடைக்கிறது என்றும் புள்ளி விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழக அரசுக்கு கிடைத்த வருவாயில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலம் 34,144.06 கோடி கிடைத்துள்ளது. முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டண மூலம் 10,493.30 கோடியும், வர்த்தக மீதான வரி மூலம் 28,164.79 கோடியும் கிடைத்திருக்கிறது. மாநில ஆயத்தர்வை மூலம் 5214 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் மத்திய அரசின் வரி பங்கு மூலம் தமிழகத்திற்கு 24,188 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

    Advertisement

    மத்திய வரிப்பங்கு

    இதர வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக தமிழக அரசுக்கு கடந்த ஐந்து மாதங்களில் 6,843 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. வரி அல்லாத வருவாய் மூலம் 5149 கோடியும், மத்திய அரசின் மானியங்கள் மூலம் 3,537 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நில விற்பனை மூலம் 57.16 கோடி கிடைத்துள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

    English Summary

    Tamil Nadu records ₹1.18 lakh crore revenue, ₹1.38 lakh crore spending and ₹30,021 crore borrowing from April to August.