சென்னை: தமிழ்நாட்டில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதன் முதலாகத் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்த மேஜர் தகவலை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தயாரிப்பதற்காக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 15 முதல் 16 நாட்களாக ஒவ்வொரு துறை வாரியாக விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் விஜய் நீண்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை, துறை ரீதியான முக்கியத் தேவைகள் மற்றும் நிதிநிலை குறித்த தகவல்களை முதல்வர் விஜய் கேட்டறிந்துள்ளார். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், பட்ஜெட்டிற்கான அமைச்சரவை கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மரிய வில்சன், ஆய்வுக்கூட்டங்களில் பெறப்பட்ட ஏராளமான கருத்துகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழக அரசின் முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என்றும், தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட், மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் ஊழலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார். முதல்வர் விஜய்யின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து மக்கள் 100 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர், கடந்த 55 நாட்களாக அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆறு மாதங்களில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு, பதில் கொடுத்த அமைச்சர் மரிய வில்சன், "அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். அவருக்கு இன்னும் ரியாலிட்டி புரியவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவிற்கும் தெரியவில்லை" என்றார்.