சென்னை: தமிழ்நாட்டில் 2026-2027 பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது காண்டிராக்ட் விடப்படும் டெண்டர் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அரசு பணம் சேமிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மக்கள் வரி பணத்தை தொட மாட்டோம்.. தொட்டவர்களையும் விட மாட்டோம் என அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாசம் அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தவெக வெற்றி, இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.. நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது டெண்டர் முறைகளில் அரசு கொண்டு வந்த மாற்றத்தை அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர், "குறிப்பிட்ட துறைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே அந்த துறைகளின் டெண்டர்களில் கலந்து கொள்ள முடியும் என்பதை மாற்றியுள்ளோம். இதன் மூலம் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் எந்தவொரு துறையின் டெண்டர்களில் கலந்து கொள்ள முடியும். மேலும், இளம் தொழில்முனைவோரும் முதல்முறையாக அரசு டெண்டரில் கலந்து கொள்ளும் வகையில் சிறு மதிப்பு கொண்ட டெண்டர் விதிமுறைகளில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இப்படி அரசு கொண்ட வந்த மாற்றங்களால் டெண்டர்களில் போட்டி அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகள் குறையும். நமது அரசு பொறுப்பேற்கும் முன்பு டெண்டர்களின் பெரும் தொகை குறிப்பிட்ட தனிநபர்களுக்கும் சில கட்சிகளுக்கும் மட்டுமே சென்றது. அதை தடுத்து நிறுத்தி நமது முதல்வர் சாதனை செய்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான அனுமதி பெற அரசிடம் வர வேண்டும் என்ற விதியை மாற்றியுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமே இதற்கான அனுமதியை பெறலாம் என சொல்லியிருக்கிறார். இந்த அதிகார பகிர்வின் மூலம் கட்டிட அனுமதிக்கான ஊழலை நிறுத்தியுள்ளார். மக்களின் வரி பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம். தொட விட மாட்டோம். தொட்டால் விட மாட்டோம். இதற்கு முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இதனால் தான் அவரது பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் ஓடி ஒளிகிறார்கள். இப்படி டெண்டர் முறைகளில் பல சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், வருமானத்தை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்றார்.