சென்னை: 2026 - 2027ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 2031க்குள் தமிழகத்தை 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் பட்ஜெட் ஒரு ரூபாயில் எப்படி இருக்கும்? ஒரு ரூபாய்க்கு தமிழக அரசின் வரவு செலவு என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
ஏற்கனவே முந்தைய அரசுகள் அமல்படுத்திய திட்டங்களின் பெயரில் 'வெற்றி' என்ற வார்த்தையை சேர்த்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. உதாரணமாக வெற்றி மடிக்கணினி திட்டம், வெற்றி திறன் பயிற்சி திட்டம் என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி எனவும், மாநில உள் உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3 சதவீதமாக குறையும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஒரு ரூபாயில் எப்படி இருக்கும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழக அரசு அரசுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது? அது எவ்வாறு எந்தெந்த துறைகளுக்கு செலவாகிறது? என்பதை ஒரு ரூபாய் என்ற கணக்கை அடிப்படையாக வைத்து விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அதிகபட்சமாக மாநிலத்தின் சொந்த வருவாய் மூலம் 43.3 காசுகள் வருகிறது. பொது கடன் மூலம் 33.1 காசும், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக 11.9 காசுகள் வருவாயாக கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மத்திய அரசிடம் இருந்து பெரும் உதவி மானியங்கள் மூலம் 6.3 காசுகள் கிடைக்கின்றன. மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலம் 5.3 காசுகளும், கடன்கள் வசூல் - மூலதன வரவாக 0.1 காசுகள் தமிழக அரசுக்கு கிடைக்கிறது. இதேபோல தமிழக அரசிடம் ஒவ்வொரு ரூபாயும் எந்தெந்த துறைகளுக்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் ஒரு ரூபாயை வைத்து பார்க்கலாம். தமிழக அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் வருவாயில் அதிகபட்சமாக 33.2 காசுகளை தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைகளுக்கு மானியங்களுக்கு செலவாகிறது. 17.3 காசுகள் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசு பெற்றிருக்கும் கடன்களுக்கு 15 காசுகள் வட்டியாக செலுத்தப்படுகிறது. ஒரு ரூபாயில் மூலதன செலவுகளுக்கு 10.9 காசுகளும், 9.9 காசுகள் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்ற கடன்களை திரும்ப செலுத்த பயன்படுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்கு 8 காசுகள் செலவிடப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள் பராமரிப்பு செலவுகளுக்காக 3.08 காசுகளும், பல்வேறு திட்டங்களுக்கு அரசு கடன்கள் வழங்க 1.9 காசுகள் செலவிடப்படுகிறது என தமிழக அரசுக்கு கூறி இருக்கிறது.தமிழக பட்ஜெட்
ஒரு ரூபாய் பட்ஜெட்
சொந்த வருவாய்
செலவுகள்
ஓய்வூதியம்