சென்னை: தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக இன்னும் 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். இதனால் ஜூலை மாதம் சட்டசபை கூடும் என்று தெரிகிறது. இதனால் தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் 12வது முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் மற்றும் புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆகியவற்றில் ஆளுநர் உரை நிகழ்த்துவதே மரபு. அந்த வகையில் தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையாற்ற உள்ளார். அவரின் உரையை தொடர்ந்து, அடுத்த 3 நாட்களுக்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 2026 -27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் திமுக சார்பாக தாக்கல் செய்யப்பட்டது இடைக்கால பட்ஜெட்டாகும். இப்போது தாக்கல் செய்யப்படுவதே முழு பட்ஜெட் ஆகும். இதனால் இந்த பட்ஜெட்டில் தவெக சார்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவெக சார்பாக அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500ஆக உயர்வு, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர், பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு ஒரு பவுன் தங்கம், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் என்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் எந்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அடுத்த 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவாக நிதியமைச்சர் மரிய வில்சன் பதில் அளிப்பார். இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 துறைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். அதேபோல் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். இதற்காக ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.